2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

’பாதுகாப்பற்ற தனியார் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை’

Editorial   / 2019 நவம்பர் 22 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

மாணவர்களுக்கு சுவாத்தியமானதும் பாதுகாப்பானதுமான கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கத் தவறும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அவர்களின் கல்வி நிறுவனங்களையும் நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

தனியார் கல்வி நிலையங்களின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினருக்கும் தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல், நகரமண்டபத்தில்,  நேற்று (21)நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர நிர்வாக எல்லைக்குள் செயற்படுகின்ற தனியார் கல்வி நிறுவனங்களில் நிலவும் சுகாதார சீர்கேடுகள், மாணவர்களின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் பெற்றோராலும் மாணவிகளாலும் முதல்வருக்கும், மாநகர சபைக்கும் தொடர்ச்சியாக பல முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மேற்படிக் கலந்துரையாடலானது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக ஆண், பெண் மாணவர்களுக்கு என தனித்தனி மலசலகூட வசதியின்மை, பாதுகாப்பற்ற கொட்டில்களின் அமைப்பு, முறையான கழிவகற்றல் வசதிகள் இன்மை. போதிய காற்றோட்டமின்மை, மாணவர்களுக்கான குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்படாமை, மாணவர்களின் அத்தியவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை, வீதி போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஓட்டோ தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மாநகர முதல்வரால் தனியார் கல்வி நிலைய உரிமையாளர்களுக்குச் சுட்டிக்காட்டப்பட்டன.

அத்துடன் ஏற்கெனவே தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் பல அடிப்படை வசதி வாய்ப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தும் இது தொடர்பில் பலர் அசமந்தமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் மாணவர்களுக்கு சுவாத்தியமானதும், பாதுகாப்பானதுமான கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கத்தவறும் உரிமையாளர்களுக்கு எதிராக, மாநகர கட்டளைச் சட்டத்தின் ஊடாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அவர்களின் கல்வி நிறுவனங்களும் நிரந்தரமாக மூடுவதற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று, மாநகர முதல்வர் கண்டிப்பான உத்தரவை விடுத்தார்.

மாநகர முதல்வரின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், ஆணையாளர் க.சித்திரவேல், மாநகர பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ரமேஸ், பிராந்திய சுகாதாரப் பணிமனையின் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், மாநகருக்குள் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .