2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'மட்டு. சிறையில் கைதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 17 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்புச் சிறைச்சாலையில் முன்பெல்லாம் நாளாந்தம் 500 முதல்  600 வரையான கைதிகள் இருந்துவந்தனர். ஆனால்,  தற்போது இந்த எண்ணிக்கை குறைவடைந்து சுமார் 350 வரையான கைதிகளே உள்ளனர் என அச்சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என்.பிரபாகரன் தெரிவித்தார்.

'மதுவை ஒழித்து வாழ்க்கையை வெற்றி கொள்வோம்' எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு, கல்லடி விமோச்சனா இல்லத்தில் சனிக்கிழமை (16) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதற்குக் காரணம் சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகஸ்தர்களின் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையும் ஏனைய விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையும் ஆகும் எனவும் அவர் கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'கைதிகள் விடுதலையாகி செல்லும்வரை கைதிகளின் பாதுகாப்பு அவர்களின் புனர்வாழ்வு என்பற்றை கவனத்திற்கொண்டு எமது சிறைச்சாலை திணைக்களம் செயலாற்றி வருகின்றது. சிறைச்சாலைக்குள் வரும் கைதிகளை பாதுகாப்பதுடன் அவர்களுக்குரிய புனர்வாழ்வு வழங்குவதுடன் அவர்களுக்கான தொழில் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

சிறைச்சாலைக்குள் இருக்கும் சிறைக்கைதிகளுக்கு சிறைச்சாலை திணைக்களத்தினால் தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதுடன் iதிகளுக்கு புனர்வாழ்வு திட்டத்தினையே பிரதானமாக மேற்கொண்டுவருகின்றது. சிறையில் இருக்கும் கைதிகளை நற்பிரஜைகளாக உருவாக்க சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் பாடுபடுவதுடன் வருடத்தில் ஒருநாள் கைதிகளை அவர்களின் குடும்பங்களோடு இணைத்து அவர்களுக்கான ஒன்று கூடலையும் நடாத்துகின்றோம்.
அதேபோன்று வெளியில் இருக்கும் கைதிகளின் பிள்ளைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு கைதிகளின் நலனில் சிறைச்சாலை திணைக்களம் சிறைச்சாலை நிர்வாகம், சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் அக்கறையுடன் செயலாற்றி வருகின்றனர்' என்றார்.

இங்கு மட்டக்களப்பு மனிதநேய ஒன்றியமான விமோச்சனா இல்லத்தின் பணிப்பாளர் திருமதி செல்விகா சகாதேவன் தெரிவிக்கையில், 'மட்டக்களப்பு மனிதநேய ஒன்றியத்தினால் மட்டக்களப்பு கல்லடியில் நடத்தப்பட்டுவரும் மது போதை பாவனையாளர்களின் புனர்வாழ்வு நிலையமான விமோச்சனா இல்லத்தில் கடந்த ஐந்து வருடங்களில் 197 பேர் மது போதை பாவனையிலிருந்து விடுபட்டு புனர்வாழ்வு பெற்று விடுதலையாகியுள்ளனர்' என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .