2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மட்டு. வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2016 மே 27 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் செயற்பாட்டினை கண்டித்தும் சுகாதார அமைச்சினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றுநிரூபம் ஒன்றைக் கண்டித்தும்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில்; ஈடுபட்டுவருகின்றனர்.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அழைப்பின் பேரில் இன்று வெள்ளிக்கிழமை காலை எட்டு மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு,  நாளை சனிக்கிழமை காலை எட்டு மணிவரை நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக அவசர சிகிச்சைப்பிரிவு வைத்தியர்கள் மட்டுமே கடமைக்கு சென்றுள்ளதாகவும் ஏனைய அனைத்து பிரிவு வைத்தியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில்; இணைந்துகொண்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் திருமதி விஜி திருக்குமார் தெரிவித்தார்.

இந்நிலையில், வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக்கு வந்த நோயாளர்கள்  சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் பணிப்பாளரின் அலுவலகத்தில் தினமும் தமது செயற்பாடுகள் தொடர்பில் பதிவுசெய்து கையொப்பம் இடவேண்டும் என சுகாதார அமைச்சின் செயலாளரினால் சுற்றுநிரூபம், அனைத்து வைத்தியசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏனைய வைத்தியசாலைகளில் அது சாத்தியமற்றது என வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களினால் சுகாதார அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆனால், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மட்டும் தங்களை பதிவுகளை மேற்கொள்ளுமாறு வற்புறுத்தல்களை வழங்குவதாக வைத்தியர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு இடம்பெற்றது. அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் திருமதி விஜி திருக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தங்களை அவமானப்படுத்தும் வகையில் வைத்திய பணிப்பாளர் நடந்துகொண்டதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் திருமதி விஜி திருக்குமார் தெரிவித்தார்.

வைத்தியர்கள் சங்கத்தின் நடவடிக்கைகளை கடந்த காலத்தில் இருந்த பணிப்பாளர்கள் விமர்சிக்கவில்லை.ஆனால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சங்கத்தினை விமர்சித்துள்ளதுடன் வைத்தியர்களையும் தரக்குறைவான முறையில் பேசியுள்ளார். இது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.

பணிப்பாளரின் செயற்பாடுகள் தொடர்பில் எமது தலைமை சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுக்கவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .