2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி பின்னடைந்தமையில் 'எனக்கு சந்தேகம்'

Gavitha   / 2016 ஜூலை 11 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ.ஹூஸைன், எஸ்.எஸ்.எம்.நூர்தீன்

வடக்கு, கிழக்கு உட்பட 9 மாகாணங்களுக்கும் சம அளவிலான அபிவிருத்திகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், அது குறித்த பரிசீலனைகள் மேற்கொள்ளப்படும். அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி அபிவிருத்தி நடவடிக்கைகள் பின்னடைந்தமைக்கு, காலநிலையே காரணமாக அமைந்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது. இது தொடர்பிலும் பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.

'அத்துடன், இந்த நாட்டிலே வாழ்கின்ற சிங்கள பௌத்தர்களுக்கும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பறங்கியர்களுக்குமென சிறப்பான சரித்திரமும் கலாசாரமும் உண்டு. இதனை யாரும் கொச்சைப்படுத்திவிட முடியாது.

நாட்டிலே சட்டப்புத்தகத்தில் இருக்கின்ற விடயங்களை விட, இந்த நாட்டிலே வாழ்கின்ற அனைத்து இன மக்களுக்கும், கண்ணியமும் கௌரவமும் வழங்கப்பட வேண்டும். மாறாக, இனவாதிகளும் கடுங்கோட்பாட்டாளர்களும் கோலோச்சுவதற்கு, நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது' எனவும் அவர் கூறினார்.

சுமார் 201 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டரங்கைத் திறந்து வைக்கும் நிகழ்வு, ஜனாதிபதி தலைமையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) மாலை நடைபெற்றது. சுமார் 10 ஏக்கர் விசாலமான காணியில் உள்ளக அரங்கு, வெளி அரங்கு என சகல வசதிகளுடன் அமைந்த நவீன விளையாட்டரங்கைத் திறந்துவைத்து உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இனிவரும் சந்ததிகள் இன, மத பேதமின்றி வாழ வழிசமைத்துக் கொடுப்பதற்கு, அனைவரும் திடசங்கற்பம் கொள்ள வேண்டும். சமூகங்களைப் பிரித்து, மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்த முனைய வேண்டாம். இன, மத ரீதியாகவும் குல பேதமாகவும் மக்களைப் பிரிக்கத் தயாராக வேண்டாம். அவ்வாறு பிரிக்க முயன்றால், மீண்டும் யுத்தத்தை நாங்கள் எதிர்நோக்க வேண்டிவரும். இந்த நாட்டில், தற்போது கல்வி கற்றுக்கொண்டிருக்கின்ற இலட்சக்கணக்கான பாடசாலை மாணவர்களுக்கு, இன ஐக்கியத்துடன் வாழ்வது பற்றி, நடைமுறையில் கற்றுக்கொடுக்க வேண்டும்' என்றார்.

'கிழக்கு மாகாணம், எமது நாட்டின் பொருளாதாரத்துக்கான கேந்திர ஸ்தானமாக உள்ளது. எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்தி பற்றிப் பேசும்போது, கிழக்கு மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தி, மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. எமது அரசாங்கம், கிழக்கு மாகாணத்துக்கு முன்னுரிமை வழங்கியிருக்கிறது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள், நீண்ட கால யுத்தத்தினால் பல கஷ்டங்களை அனுபவித்தவர்கள். யுத்தத்தின் கொடூரமான அனுபவங்களை, அம்மக்கள் கொண்டுள்ளனர். யுத்தம் ஏன் ஏற்பட்டது என்று, இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் தெரியும். இந்த நாட்டில் யுத்தம் மீண்டும்  ஏற்படாதிருக்கத்தான், எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கின்றது' என்றும் அவர் கூறினார்.

'கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, மேல் மாகாணத்தின்  அபிவிருத்தியைப் போன்று இருக்க வேண்டும். வட மாகாணமும் மேல் மாகாணம் போன்று அபிவிருத்தி அடையவேண்டும். அபிவிருத்தி பற்றிப் பேசும் போது, வடக்கு - கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் என்ன குறை உள்ளது என்பது ஆராய வேண்டும், சிந்திக்க வேண்டும்.

வடக்கிலும் கிழக்கிலும் அபிவிருத்தி குறைந்துள்ளது. அது ஒவ்வாத காலநிலை காரணமாகவா என்று சந்தேகம் கொள்கிறேன். இந்தப் பகுதியிலுள்ள வறட்சியான காலநிலை காரணமாக, அபிவிருத்திகள் பின்னடைந்தனவா எனக் கேட்க விரும்புகின்றேன். உலகத்தில், வறட்சியான காலநிலையைக் கொண்ட பல நாடுகளே, வெகுவாக முன்னேறி இருக்கின்றன.

வேலையில்லாப் பிரச்சினை பற்றி, கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார். இந்த வேலையில்லாப் பிரச்சினை, கிழக்கு மாகாணத்தில் மாத்திரமல்ல, வட மாகாணத்திலும் இருக்கின்றது.  இந்த நாட்டிலுள்ள 9 மாகாணங்களிலும் இது இருக்கின்றது.

இன்று, உலகின் பல நாடுகளில் இரத்த ஆறு ஓடுகின்றது. யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படாமல் இருப்பதற்கும் இந்த நாட்டை முன்னேற்றுவதற்கும், நாங்கள் எல்லோரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அதற்கான பொறுப்பும் கடப்பாடும் நம் அனைவருக்கும் உண்டு' என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, 'சமாதானத்துக்காக மும்முரமாக செயற்படுகின்ற நாடுகளின் பட்டியலில், இலங்கைக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. உள்நாட்டில் சமாதானத்தையும் அமைதியையும் ஏற்படுத்துகின்ற நாடுகளில் மூன்று நாடுகள் முன்னணி வகிக்கின்றன. அந்த மூன்று நாடுகளில் இலங்கையும் இருக்கின்றது. சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் பொருளாதாரத்தினை முன்னேற்றுவதற்கும் ஒவ்வொரு மனிதனும் ஆற்ற வேண்டிய பொறுப்புகளும் கடமைகளும் இருக்கின்றன. அனைவரும் சமமானவர்கள் என்றே வாழ வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு, நாங்கள் முன்னுரிமை வழங்கியிருக்கின்றோம். எமக்கு வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய உதவிகளிலும் முதலீடுகளிலும், அதிகமானவற்றை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வழங்கி வருகின்றோம். இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு சமூகத்தின் கலாசாரத்தினையும் தனித்துவத்தினையும் மதிக்க வேண்டும்.

இந்த நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் அடையாளத்தைச் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் சமமானவன், சமத்துவமானவன் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்' என்றும் கூறினார்.

'மட்டக்களப்பை நான் நன்கறிவேன். 1971ஆம் ஆண்டில், மட்டக்களப்பில் நான் சிறைவாசம் அனுபவித்தேன். அந்தக் காலத்தில் நான் சேகுவராக்காரன் அல்ல. என்னை இங்கு கொண்டு வந்து சிறையில் போட்டு வைத்தார்கள். மட்டக்களப்புக்கு வரும் போதெல்லாம், அந்த நாள் ஞாபகம் வருகின்றது' என ஜனாதிபதி மேலும் ஞாபகப்படுத்தினார்.

இந்த நிகழ்வில், விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அமைச்சர் தயா கமகே, இராஜாங்க அமைச்சர்களான ருவன் விஜேவர்தன, ஹிஸ்புல்லாஹ் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .