2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'15 வருட காலப்பகுதியில் மு.கா.வினால் எதனையும் அமுல்படுத்த முடியவில்லை'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 14 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

2000ஆம் ஆண்டிலிருந்து கடந்த 15 வருடகாலப் பகுதியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசியல் அதிகாரம் என்பதை தனக்குள் ஒரு போர்வையாக போத்திக்கொண்டிருந்ததே தவிர உண்மையான அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளவோ,  அதனூடாக எதனையும் அமுல்படுத்தவோ முடிந்திருக்கவில்லை என  மு.கா.வின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மு.கா.வின் தேசிய மாநாட்டுக்கான கலந்தாலோசனைக் கூட்டம், ஏறாவூர் குல்லியத்துல் தாரில் உலூம் அரபிக் கலாசாலை முன்றலில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'சமூகத்தின் பலத்தையும் தேவையையும் உரிமைக்கான வேணவாவையும் சர்வதேசத்திற்கும் நாட்டுக்கும் தெரிவிப்பதற்கும் எங்களது சமூகத்தின் உள்ளக் கிடக்கைகளையும் கொள்கைகளையும் நாட்டின் தலைவர்கள்  முன்னிலையில் தெளிவுறப் பிரகடனம் செய்வதற்கும் நடக்கவிருக்கின்ற 19ஆவது தேசிய பேராளர் மாநாடு ஒரு வாய்ப்பை அளிக்கும்.

இதற்கு முன்னரும் பல வேறுபட்ட ஆட்சியாளர்கள் கோலோச்சும்போது பல பிரகடனங்களைச் செய்திருக்கின்றோம்.
எமது ஸ்தாபகத் தலைவர் அஷ்;ரப் மறைந்த பின்பு 2000ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு வரைக்கும் இப்போதைய மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் 2001ஆம் ஆண்டுக்கும் 2004ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் மாத்திரம்தான் உண்மையான அரசியல் அதிகாரத்தை செயற்படுத்தக்கூடிய ஒரு அமைச்சராக இருந்தார். இந்த உண்மையை எல்லோரும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். இதுதான் யதார்த்தம்.

இந்தக் காலப்பகுதியை விட வேறு பல தடவைகளில் ரவூப் ஹக்கீம் வெறும் அமைச்சராகவே இருந்த காரணத்தினால் அவராலோ அல்லது கட்சியாலோ சமூகம் சார்பாக எதனையுமே சாதிக்க முடியாமற் போனது என்ற உண்மையையும் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.அந்தப் பலவீனமான கட்டுண்ட நிலை 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற நல்லாட்சிக்கான புரட்சியுடன் மாற்றம் பெற்றிருக்கின்றது.

இப்பொழுது எமது கட்சியும் கட்சித் தலைவரும் அதிகாரத்தை அமுல்படுத்தக் கூடியதாக இருப்பதோடு இந்த சமூகமும் பலம் பெற்றுள்ளது. இதுவும் யதார்த்தம். இப்பொழுது இந்தக் கட்சியும் கட்சித் தலைமையும் முஸ்லிம் சமூக பலத்தைக் காட்டி பல விடயங்களை சாதிக்கும் வல்லமையுடன் திகழ்கிறது.இது நல்லாட்சி மாற்றத்தினூடாக எமக்குக் கிடைத்த வெற்றி என்பதில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

2000ஆம் ஆண்டிலிருந்து கடந்த 15 வருட காலப் பகுதியில் மு.கா அரசியல் அதிகாரம் என்பதை ஒரு போர்வையாக போத்திக் கொண்டிருந்ததே தவிர உண்மையான அரசியல் அதிகாரத்தை பெற்றுக் கொள்ளவோ  எதனையும் அமுல்படுத்தவோ முடிந்திருக்கிவில்லை. அந்த நிலை இப்பொழுது முற்றுமுழுவதுமாக மாற்றப்பட்டு மாகாண மட்டத்திலும் மத்திய அரசிலும் பாரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற கட்சியாக மு.கா பரிணமித்திருக்கின்றது.

அதேவேளை, சம காலச்சூழ்நிலையின் சவால்களைச் சமாளிக்கும் வகையில் மு.கா கட்சியும் கட்சிக்குள்ளே பாரிய புனரமைப்பைச் செய்து கொண்டிருக்கின்றது. இதுவரை காலமும் அரசியல் தீர்வு வரும் என்று கனவு கண்டு பேசிக் கொண்டிருந்த அNதுவேளை அது எப்போது வரும் என்கின்ற கேள்வி எங்களில் எல்லோருக்கும் இருந்தது. ஆனால், இப்பொழுது அப்படியல்ல அரசியல் தீர்வு எப்போது வரும் என்கின்ற ஆதங்கமான கேள்விக்கு முற்றுப் புள்ளி வரும் காலம் வந்து விட்டது. அந்தத் தறுவாய் இப்பொழுது வந்திருக்கின்றது. எனவே, இந்த வேளையில்தான் முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியல் அதிகாரத்தையும் அதனூடாக அரசியல் உரிமைகளையும் பெற்றுக் கொள்வதற்காக எமது ஒட்டு மொத்த சமூக பலத்தையும் உலகுக்குக் காட்ட வேண்டியிருக்கின்றது' என்றார்.

இந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட மு.கா நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஷாஹிர் மௌலானா, மு.கா தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்பாளருமான யூ.எல்.எம்.முபீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X