2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'விழிப்புணர்வு மூலம் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க முடியும்'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 17 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எஸ்.எம்.எம்.றம்ஸான்,அஸ்லம் எஸ்.மௌலானா

மக்கள் மத்தியில் விழிப்புணர்வு மற்றும் சமூக அக்கறையுடன் கூடிய துணிச்சலான செயற்பாடுகள் மூலமாகவே சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க முடியுமென நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மகளிர் பிரிவு தெரிவித்தது.

காத்தான்குடிப் பிரதேசத்தில் 10 வயதுடைய சிறுமியொருவருக்கு சூடு வைக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ந.தே.முன்னணியின் மகளிர் பிரிவு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில், 'பண்பாடான நாகரிகப் பின்னணியும் வளர்ச்சியடைந்த சமூகக் கட்டமைப்பும் கொண்ட பிரதேசமாக கருதப்படும் காத்தான்குடியில் இவ்வாறான துரதிஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றமை எம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சிறுவர் மீதான வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்கள் எவராயினும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.   இவ்வாறான சம்பவங்கள் இன்று நாடளாவிய ரீதியிலும் நாளாந்தம் அதிகரித்துள்ளமை கண்கூடாகும். இவற்றை முற்றாக ஒழிக்க வேண்டுமாயின், இது தொடர்பான விழிப்புணர்வு சமூகத்திலுள்ள ஒவ்வொருவரிடத்திலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

குறித்த சிறுமியின் மீதான இந்த வன்முறைச் சம்பவம் கடந்த மூன்று ஆண்டுகளாக இடம்பெற்றபோதிலும், இதனை வெளிக்கொணர்வதற்கு இத்தனை ஆண்டுகளாக எவருமே முன்வராமல் போனது, இது தொடர்பான விழிப்புணர்வின்மையை அல்லது சம்பந்தப்பட்ட தரப்பினரை எதிர்த்து சிறுமியைக் காப்பாற்றும் சமூக அக்கறையுடன் செயற்பட பலரும் தயங்கியமையை உணர்த்துகின்றது.  எனினும், இப்பொழுது இச்சம்பவத்தை  துணிச்சலுடன் வெளிக்கொணர்ந்தவர்கள்; பாராட்டப்பட வேண்டியவர்கள்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் மிக நீதியாக நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அத்துடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமலிருப்பதையும் அனைவரும் உறுதி செய்யவேண்டும். குறித்த சிறுமியின் எதிர்கால வாழ்வு, கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வண்ணம் பாதுகாக்கப்படுவதையும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மகளிர் பிரிவாகிய நாம் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுவோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X