2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

13ஆவதுடன் விளையாடுபவர்கள் விரைவில் பயனை அனுபவிப்பர்: மாகாணசபை உறுப்பினர் கருணாகரம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 22 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

13ஆவது திருத்தம் தொடர்பான பின்னணி தெரியாது அதனுடன் விளையாடும் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் அதன் பயனை அனுபவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தச் சட்டத்தினை அரசியலமைப்பிலிருந்து அகற்றுவது தொடர்பாக பேசப்பட்டுவரும் விடயங்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'ஸ்ரீலங்கா சோஷலிச குடியரசின் அரசியலமைப்பு என்பது 13ஆவது அரசியல் திருத்தத்தையும் உள்ளடக்கியதே என்பதைப் புரியாத, தெரியாத, விளங்காத அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்கள் அதனை அகற்றவேண்டும் என்று கூறுகின்ற வேலையில் நாமும் மௌனமாக இருப்பதுகூட அவர்களது கருத்துக்களை நாமும் ஆமோதித்ததுபோல ஆகிவிடும்.

13ஆவது திருத்தம் இலங்கை அரசியலமைப்பில் பிரிக்கப்படமுடியாத பகுதி என்பதுடன் இன்றைய நாடாளுமன்றத்தில் பிரதேச சபைகள், மாகாண சபைகள் என்பவற்றில் அங்கத்தவர்கள், பிரதிநிதிகள் யாவரும் இலங்கை அரசியலமைப்பினை பேணப் பாதுகாப்பேன் என்று சத்தியப்பிரமாணம் செய்தவர்கள்.

அவர்களில் எல்லாவெல மேதானந்த தேரர், விமல் வீரவன்ஸ, சம்பிக்க ரணவக்க ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். இவர்களும் இவர்களது கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் 13ஆவது திருத்தம் உள்ளடக்கப்பட்ட அரசியலமைப்பிற்கு விசுவாசமாகவும் பேணிப்பாதுகாப்பதாகவும் சத்தியப்பிரமாணம் செய்தவர்களாவர்

இவர்களது விமர்சனங்கள் அரசியலமைப்பை மீறுவதாக அதுவும் அப்பட்டமாக மீறுவதாகவே காணப்படுகின்றது. நமது நாட்டின் நீதி, நிர்வாக, அரசியலமைப்புச் சட்டங்களின்படி அரசியலமைப்பை மீறவும் அதுவும் பேணிப்பாதுகாப்பதாக சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட அரசியலமைப்புக்கு எதிராக கதைக்க, பேச, விமர்சிக்க இந்த இலங்கைத் நாட்டில்  உரிமையுள்ள பிரஜைகள் எல்லாவெல மேதானந்த தேரரும் விமல் வீரவன்ஸவும் சம்பிக்க ரணவக்கவும் இன்னும் ஒரிருவரும் மட்டும்தான்.

இவர்கள் ஏதோ ஒரு வகையில் இவ்வாறு நடந்து கொள்வதற்காக உச்ச அதிகாரத்தினால் தட்டிக்கொடுத்து வளர்க்கப்படுவதாகவும் இலங்கை அரசியல் போக்கினை அவதானிக்கும்போது உணர முடிகின்றது. 13ஆவது திருத்தம் தொடர்பான பின்னணி தெரியாது, அதனுடன் விளையாடும் இவர்கள் அதன் பயனையும் அனுபவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

13ஆவது திருத்தம் தொடர்பாக மேற்கொண்ட விமர்சனங்கள் அவர்களுக்கு எதிர்மறையாக மீண்டுமொரு சர்வதேச ஆதரவினை தமிழ்த் தேசியத்துக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது மட்டுமல்ல தமிழ் தேசியத்துக்கு அவர்களது விமர்சனம் பலத்தையும் சேர்த்துள்ளது.  13ஆவது திருத்தம் தொடர்பான பேரினவாத விமர்சனத்தின் பின்பும் இந்நாள் அமைச்சர், பிரதியமைச்சர்களான முன்னாள் போராளிகளின் கருத்துக்களும் நடத்தைகளும் தான் நமக்கு கோடரிக்காம்பினை ஞாபகப்படுத்துகின்றன.

13ஆவது திருத்தத்தின் மூலமான அதிகாரங்களைக் கையாள்வது தொடர்பாக இந்த முன்னாள் போராளிகள் எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை என்ன? இருந்த அதிகாரங்களையும் மத்திய அரசுக்கு பாராதீனப்படுத்த உதவியதே!

காணி, பொலிஸ் அதிகாரங்கள் இதுவரை கனவிலும் அமுல்படுத்தப்படவில்லை. இதைவிட, கல்வி, சுகாதாரம் தொடர்பான மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் மத்திய அரசால் மறைமுகமாகப் பறிக்கப்பட்டு பல வருடங்களாகிவிட்டது. பிரதேச அபிவிருத்தி தொடர்பாக மாகாண சபையின் கட்டுப்பாடும் திவிநெகும மூலம் இல்லாமல் செய்யபோகின்றது.

எல்லாவற்றிற்கும் மேலாக மத்திய அரசின் விவேகமற்ற போக்குக்கு, அரசியலமைப்புக்கு முரணான போக்குக்கு கடிவாளம் இட்டு வந்த நீதித்துறையும் கூட இன்று அதிகாரம் இழந்து தாழ் வணங்கி தலை தாழவைக்கும் நிலைமைக்கு ஏற்பாடாகி உள்ளது. இவ்வளவும் கைகட்டி வாய் பொத்தி வஞ்சகப் புகழ்ச்சி செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நம் முன்னாள் போராளிகள்.

இது மாத்திரமல்ல வட, கிழக்கில் சிவில் நிர்வாகத்துக்கு மாறாக இராணுவ நிர்வாகத்துக்கு ஒத்து ஊதுவது மூலம் 13ஆவது திருத்தத்தின் மூச்சுக் குழாயையும் நசுக்கிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள். தமது செயற்பாட்டிற்கு இவர்கள் கற்பிக்கும் நியாயம் வேறு,  ஆனால் நாம் சபிக்கப்பட்டவர்களாகிவிட்டோம். பேரினவாதத்தினாலும் இவ் இனத்தின் கோடாரிக்காம்புகளாலும் நாம் நமது உரிமைகள் இழக்க வைக்கப்பட்டுள்ளோம். இது நமது சாபக்கேடு மட்டுமல்ல. நாட்டின் சாபக்கேடும் கூட.

நாட்டின் நல்லாட்சி என்பது அரசியலமைப்புக்கு உட்பட்டதாக அமைய வேண்டும். நல்லாட்சி நம் நாட்டில் இல்லை என வாழாவிருக்காது மாறிவரும் சர்வதேச களநிலவரத்தை நமக்கேற்ப மாற்றி 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் நம் தலைவிதியை தீர்மானிக்க அனைவரும் ஓரணியில் திரள்வோம். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது நாம் அறிந்ததே' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .