2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கடந்த காலங்களை மறந்து சிந்தித்து செயற்பட வேண்டும்-கிழக்கு முதல்வர்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 21 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

புனர்வாழ்வளிக்கப்பட்டு தற்போது வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் உள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு நேற்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தொழிற்பயிற்சி உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர், "இப்புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலையாகின்ற போது அனைவரும் ஒரு தொழிலில் சிறப்புத் தேர்ச்சி உடையவர்களாக திகழ வேண்டும். அதற்கேற்றால் போல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்தோடு, இங்கிருந்து விடுதலை பெற்றுச் செல்கின்ற போது இயல்பு வாழ்க்ககைக்கு திரும்ப வேண்டும். கடந்த காலங்களில் தோன்றிய கசப்பான சம்பவங்களை மறந்து, நாங்கள் அனைவரும் எமது குடும்பம், எமது தொழில், எமது வருமானம் என  ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். மேலும் தேவையற்ற விதண்டா வாதங்களைப் பேசி இனியும் நாம் நாட்களைக் கடத்தக் கூடாது.

விடுதலைப் போராட்டம் ஏன் ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கு அப்பால் அதனால் ஏற்பட்ட தாக்கங்களே அதிகமாக எமக்குப் புலப்படுகின்றன. எனவே கடந்த காலங்களில் நாம் அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ அச்சூழ்நிலையில் சிக்கித் தவிர்த்தோம். ஆனால் இன்று அவ்வாறல்ல. புதுமையான ஓர் சிந்தனை உதயமாகி எமது மனங்களிலே விரோதப் பாங்கு மறைந்து அனனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கின்றது.

இதனை நாம் சரியாகப் பயன்படுத்தி எமது தனியாள் வருமானங்களை அதிகரித்து மென்மேலும் நாம் சிறப்பபுப்பெற உழைக்கவேண்டும். ஒரு மனிதன் எந்தவொரு தொழிலும் இல்லாமல் இருக்கின்ற போதுதான் அவனது சிந்தனை தவறான வழியில் செல்கின்றது. எனவே அனைவரும் உங்களது திறமைக்கும் ஆற்றலுக்கும் ஏற்றால் போல் தொழில்களைத் தேர்ந்தெடுத்து, அதனைச் சிறப்பாக செய்து  இயல்பு வாழ்க்கையினைத் தொடர வேண்டும்" என அவர் கூறினார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், புனர்வாழ்வுகளின் பொறுப்பதிகாரி கேணல் எஸ்.கே.ஜி.என்.பி.எகலமல்பே, கிழக்கு பிராந்திய புனர்வாழ்வுகளின் ஒருங்கிணைப்பு அதிகாரி கேணல் அபேயவர்த்தன, வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாம் பொறுப்பதிகாரி மேஜர் காமினி ரத்நாயக்க மற்றும் முதலமைச்சர் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் கௌரிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .