2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கிராம உத்தியோகத்தரை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

A.P.Mathan   / 2010 நவம்பர் 01 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

ஏறாவூர்பற்று தளவாய் கிராம உத்தியோகத்தர் கே.ஜெகநாதனை தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ்நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த பொலிஸ் அதிகாரியின் கைதினை தொடர்ந்து மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் நாளை வர்த்தகர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக செங்கலடி வர்த்தகர் சங்கத் தலைவர் கே.மோகன் அறிவித்துள்ளார்.
 
செங்கலடி பிரதேசத்திலுள்ள தளவாய் கிராமசேவை உத்தியோகத்தர் கே.ஜெகநாதன் கடந்த சனிக்கிழமை மாலை, சிவில் உடைதரித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் தாக்கப்பட்டதோடு அவரிடமிருந்த உடமைகளும் பறித்து கிழித்தெறியப்பட்டது.
 
ஏறாவூர் பொலிஸ் பிரிவில் சேவையாற்றும் குறித்த கான்ஸ்டபிள், ஏறாவூர் நகர பிரதேச சபை உறுப்பினர் ஒருவரது பாதுகாப்பிற்காக இணைக்கப்பட்டுள்ளார்.
 
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக்கோரியே இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
 
இது தொடர்பாக தமிழ்மிரருக்கு கருத்து தெரிவித்த செங்கலடி பிரதேச வர்த்தகர் சங்கத் தலைவர் கே.மோகன், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதால் நாளைய ஹர்த்தாலை தாங்கள் கைவிட தீர்மானித்துள்ளதாக கூறினார்.
 
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா இன்று காலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரத்னவை சந்தித்து கிராமசேவை உத்தியோகத்தர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார்.
     
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது பக்க சார்பு இன்றி நடவடிக்கை எடுக்கப்படுமென அத்தியட்சகர் தன்னிடம் உறுதியளித்திருந்ததாகவும் இன்று மாலை தனக்கு கிடைத்த தகவலின்படி மேற்படி பொலிஸ் கான்ஸ்டபிள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தினை தமிழ்மிரர் இணையத்தளம் சார்பாக தொடர்புகொண்டு கேட்டபோது, குறித்த பொலிஸ் அதிகாரி கைதுசெய்யப்பட்டதை உறுதிப்படுத்தியதோடு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X