2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு முற்றாக நீரில் மூழ்கியது;பட்டினியில் மக்கள்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 10 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பில் தொடர்ந்து பெய்து வரும் இடியுடன் கூடிய மழைகாரணமாக குளங்கள் அனைத்தும் திறந்து விட்டதனால் மாவட்டம் முழுமையாக நீரில் மூழ்கியதுடன் மக்கள் உணவின்றி பட்டினியில் வாடும் பரிதாப நிலையும் காணப்படுகின்றது.

இவ்வெள்ள அபாயம் காரணமாக சுமார் 5 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக தகவல் தெரிவிக்கின்றது. கிரான், செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கித்துள், உறுகாமம், உறுத்தானை உட்பட பல கிராமங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை ஹெலிகொப்டர் மூலம் மீட்கும் பணியில் விமானப்படையினர் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை படுவான்கரையின் மீட்புப்பணியி;ல் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் இயந்திரப்படகின் ஊடாக ஈடுபட்டனர். படுவான்கரைப் பகுதியில் மிக மோசமாக வெள்ளம் பாதித்துள்ளது.

பட்டிப்பளை, வவுணதீவு, வெல்லாவெளி, கிரான், செங்கலடி பிரதேசங்களில் குளங்கள் அமைந்துள்ளதினால் அக் குளங்கள் திறந்துவிடப்பட்டதினால் அப்பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன

இதனால் ஒட்டுமொத்த வேளாண்மையும் அழிந்துள்ளது. நேற்றிரவே எதிர்பாராத விதம் இந்த வெள்ளத்தின் ஆக்கிரமிப்பு இடம்பெற்றது. இதனால் மக்கள் உடனடியாக இடம்பெயர முடியாத நிலையில் வீடுகளில் உயரமான இடங்களை அமைத்து இரவுப் பொழுதைக் கழித்த நிலையில் முப்படையினரும் இவர்களை இன்றுமீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

உன்னிச்சை குளம் வவுணதீவில் அமைந்துள்ளதினால் வெள்ளத்தின் மிகமோசமான பாதிப்பு வவுணதீவு கிராமங்களில் காணப்படுகின்றது. இன்று நண்பகல் வரை மாவட்ட செயலக தகவல் படி 133,248 குடும்பங்களை சேர்ந்த 490,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 15368 குடும்பங்களை சேர்ந்த 58,524 பேர் 146 முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதுடன் 46,685 குடும்பங்களை சேர்ந்த 177,046 போர் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
 
இதேவேளை 782 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 2664 வீடுகள் பகுதி சேதத்திற்கம் உள்ளாகி உள்ளன. இதேவேளை 261,874 பேரது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 15,483 பேரது சேனைப்பயிரும் அழிவடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல் தெரிவிக்கின்றது.

இவ்வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு கொழும்பு வீதி போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. கொழும்பு, மற்றும் திருகோணமலைக்கான புகையிரத சேவையும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மன்னம்பிட்டி  வீதி நீரில் மூழ்கியதனால் கெக்றானையில் இருந்து பொலநறுவை வரை மட்டக்களப்பு புகையிரத பஸ்சேவை இடம்பெறுகின்றது. அங்கிருந்து வரும் மக்கள் வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பிற்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .