2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்பு தானாக அரசுடனான பேச்சிலிருந்து பின்வாங்காது: பொன் செல்வராசா

Menaka Mookandi   / 2011 ஜூன் 23 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கே.எஸ்.வதனகுமார்)

ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இன்று 23ஆம் திகதி 7ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது. அரசாங்கம் எந்த மனநிலையில் எம்முடன் பேசுகின்றதோ தெரியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 60 வருடங்களுக்கு மேலாக உரிமை மறுக்கப்பட்டு பல இன்னல்களை அனுபவித்த தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான இதய சுத்தியுடனான பேச்சிலேயே ஈடுபட்டுள்ளது.

இப்பேச்சில் தமிழ் மக்களின் உரிமைக்கான சிறந்த ஒரு முடிவை பெறும்வரை ஈடுபடுவோம். இப்பேச்சில் இருந்து கூட்டமைப்பு தானாகவே ஒரு போதும் பின்வாங்காது என த.தே.கூ. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார். கொத்தியாபுலையில் கிராம அபிவிருத்தி வேலைகள் தொடர்பாக அக்கிராம மக்களுடனான கலந்துரையாடலில் ஈடுபட்ட போது மக்கள் மத்திலில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'60 வருடத்திற்கு மேலாக  எமது மக்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு பல இன்னல்களை அனுபவித்தனர். ஆரம்பத்தில் எமது தலைவர்கள் சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதற்கு ஆட்சியில் மாறி மாறி இருந்த ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் உரிமை நலன் சார்பான முடிவையும் எடுக்காததினால் எமது இளைஞர்கள் ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆயுதத்தை கையில் எடுத்து 30 வருட உரிமைக்கான ஆயுதப் போராட்டம் இடம்பெற்றது. இதன் போது மக்கள் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்தனர்.

அப்போராட்டமும் மழுங்கடிக்கப்பட்டு மக்களுக்கு அப்போது இடம்பெற்ற கொடுமைகள் தற்போது இல்லாவிட்டாலும் எந்த உரிமையுமின்றி எமது மக்கள் நடை பிணமாகவே திரிகின்றனர். ஆயுதப் போராட்டம் மௌனித்த நிலையில் மீண்டும் த.தே.கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டம் சாத்வீக வழியிலேயே தொடர்கிறது.

அது பேச்சுவார்த்தை ஊடாக வென்றெடுப்பதற்கான பயணமாகவே தொடரும். அரடன் நாம் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தையினை இந்தியாவும் சர்வதேச நாடுகளும் பார்த்துக்கொண்டு இருக்கின்றது. பேச்சை தொடருமாறும் அவர்கள் தெரிவித்துக்கொண்டு இருக்கின்றனர். எதற்கும் எவருக்கும் சோரம் போகாத த.தே.கூ. உறுதியான நிலைப்பாட்டில் இருந்து தமிழ் மக்கள் காலா காலமாக அனுபவித்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சில் ஈடுபடும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .