2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மட்டு. மாநகரசபை எல்லைப் பெயர்ப்பலகை கழட்டப்பட்டமைக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாநகரசபை எல்லையில் போடப்பட்டிருந்த பெயர்ப்பலகை அகற்றப்பட்டமைக்கு எதிராக  மட்டக்களப்பு மாநகரசபையில் நேற்று வியாழக்கிழமை  கண்டனத் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாநகரசபை எல்லையென கூறப்படும் அஷ்ஷுஹதா வீதியின் வடக்கு எல்லைப்பக்கமாகவுள்ள பகுதியில் மட்டக்களப்பு மாநகரசபை அதன் பெயர்ப்பலகையை நாட்டியது. ஆனால் இந்தப் பெயர்ப்பலகை இரவோடுவிரவாக களட்டப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சிவகீர்த்தா பிரபாகரன் தலைமையில் மாநகரசபை அமர்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே மேற்படி கண்டனத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

மட்டக்களப்பு மாநகரசபையின் எல்லையான வடக்கு எல்லையிலுள்ள வீதியொன்றுக்கு காத்தான்குடி நகரசபையினால் அஷ்ஷுஹதா வீதி எனப்படும் பெயர்ப்பலகையொன்று போடப்பட்டிருந்தது. மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் இப்பெயர்ப்பலகையை காத்தான்குடி நகரசபை போட்டதால் அதை அகற்றுமாறு காத்தான்குடி நகரசபைக்கு மட்டக்களப்பு மாநகரசபை கடிதமொன்றை   அனுப்பிவைத்தது.

மட்டக்களப்பு மாநகரசபையால்   கடிதம் அனுப்பி ஒரு மாதத்திற்கு மேலானபோதிலும், காத்தான்குடி நகரசபையிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாநகரசபையின் வடக்கு எல்லையிலுள்ள அஷ்ஷுஹதா வீதியில் அஷ்ஷுஹதா வீதியென  காத்தான்குடி நகரசபையினால் போடப்பட்டிருந்த பெயர்ப்பலகையை மட்டக்களப்பு மாநகரசபையின் ஊழியர்கள் அகற்றி அப்பெயர்ப்பலகையை காத்தான்குடி எல்லைப்பக்கமாக நாட்டி விட்டு அஷ்ஷுஹதா வீதியின் வடக்குப்பக்கமாக    வணக்கம், மட்டக்களப்பு மாநகரசபை அன்புடன் வரவேற்கின்றதென எழுதப்பட்ட பெயர்ப்பலகையை மட்டக்களப்பு மாநகரசபை நாட்டியது.

அப்பெயர்ப்பலகையை  நாட்டும்போது பெயர்ப்பலகையில் எழுதப்பட்டிருந்த வணக்கம் என்ற சொல்லை  அகற்றுமாறும் இது இஸ்லாத்திற்கு விரோதமான சொல்லெனவும்  அங்கு வந்த சிலர் கூறியதாக  தெரிவித்துள்ளனர். இந்த நிலையிலேயே அப்பெயர்ப்பலகை களட்டப்பட்டுள்ளது.  இதனை  மட்டக்களப்பு மாநகரசபை வன்மையாக கண்டிக்கிறது.  இன ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் கருத்திற்கொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இது இரண்டு சமூகங்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலென அக்கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரமேயர் சிவகீர்த்தா பிரபாகரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பரிடம் கேட்டபோது,

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள்ளேயே அவர்களது பெயர்ப்பலகையை நாட்டினர். ஆனால் அந்த பெயர்ப்பலகை  அகற்றப்பட்ட விடயம் எனக்குத் தெரியாது. அதை அகற்றியதற்கும் காத்தான்குடி நகரசபைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. மட்டக்களப்பு மாநகரசபையின் பெயர்ப்பலகை அகற்றப்பட்டமைக்கு எனது கண்டனங்களை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X