2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'மட்டக்களப்பு ஆயுர்வேத வைத்தியசாலையின் குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டும்' மாகாண சபை உறுப்பினர் இரா.து

Kogilavani   / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)
மட்டக்களப்பு ஆயுர்வேத வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளை தீர்ப்பதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நடவடிக்கை  எடுக்கவேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலை குறித்து கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு கடந்த புதன்கிழமை அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

'இப்பொழுது உலகில் மிகவும் பிரபல்யம் அடைந்துவரும்  ஆயுர்வேத மருத்துவ முறையானது எமது மட்டக்களப்பு மாவட்டத்திலும்  பிரபல்யம் அடைந்துவருவது குறிப்பிடத்தக்கது. இம்மருத்துவ முறைக்கு நல்ல கிராக்கியும் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பில் புதுக்குடியிருப்பு  மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை எமது  கிழக்கு மாகாண சபையின கீழ் இயங்கிவருகிறது.

இவ் வைத்தியசாலையானது மாகாணத்திலுள்ள ஏனைய வைத்தியசாலைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைந்தளவு வளத்துடன் உள்ளது. எனினும்  அங்கு வேலை செய்யும் வைத்தியர்கள், பணியாளர்கள், கிழக்கு மாகாண ஆணையாளர், செயலாளர், அமைச்சர் போன்றோரின் அர்பணிப்பிலும்,  விடாமுயற்சியினாலும் சிறப்பாக இயங்கிவருகின்றது .

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் வாகரை  தொடக்கம் திருக்கோவில்  வரையுள்ள பிரதேசங்களிலிருந்து இவ்வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருகின்றார்கள். இவ்வாறு  இருக்கும்  போது  இவ் வைத்தியசாலையில்  உள்ள குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக

(1) 2003 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட இரண்டு விடுதிகளும் நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு ஏற்றவகையில் அமைக்கப்படவில்லை. இவை திறந்தவெளியாக காணப்படுகின்றன. இரண்டு  விடுதிகளையும்  திருத்தி  நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வகையில் தயார்படுத்த வேண்டும்.

2) அங்கு காணப்படும் பெண் நோயாளர் விடுதி பாதுகாப்பான முறையில் திருத்தப்பட்டு  மேலதிகமாக இரண்டு தொடக்கம் மூன்று விடுதிகளை புதிதாக அமைத்தல் வேண்டும்.

3) விடுதிகளில் மலசலகூட வசதிகள் ஒழுங்காக காணப்படவில்லை. இதைதிருத்தி அமைப்பதோடு மேலதிகமாக மலசலகூடவசதிகள்  அமைக்கப்படவேண்டும்.

4) நோயாளர்களுக்கு தீடீர் சுகவீனம் ஏற்படும் போது வேறு வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு எதுவித வாகன வசதியும்  அவ்வைத்தியசாலையில் காணப்படவில்லை. எனவே அவசரத் தேவைக்கு  ஒரு வாகனத்தை இவ் வைத்தியசாலைக்கு வழங்குதல் வேண்டும்.

5) வெளிநோயாளர் பிரிவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதியஅளவு மருந்துவகைகள்  இல்லை. வெளிநோயாளர் பிரிவிற்கு அதிகளவு நோயாளர்கள் வருகை தருவதால் மருந்து  தட்டுப்பாடு நிலவுகின்றது.  மருந்துகளின் தட்டுப்பாட்டை போக்குவதற்கு கூடியளவு  நிதியை  மருந்துகொள்வனவிற்கு ஒதுக்குதல் வேண்டும்.

6) பஞ்சகர்மா சிகிச்சைபிரிவு  இவ் வைத்தியசாலையின்   பொறுப்பதிகாரிகள் விடுதியில் தற்போது இயங்குகின்றது. இவற்றுக்கென ஒரு தனியான கட்டிடத்தை அமைத்து அதில் நவீனமுறையில் சிகிச்சை அளிப்பதற்கு வழிவகைசெய்ய வேண்டும்;.

7) மருந்து தயாரிக்கும் நிலையம் மருந்து தயாரிப்பதற்குரிய  அடிப்படைகள் வசதிகள் குறைவான நிலையில் காணப்படுகின்றது .ஆகவே மருந்து தயாரிக்கும் நிலையத்தினை கூடியளவு மருந்து தயாரிக்கக்கூடிய நிலையமாக மாற்றுவதற்கு புதிய கட்டிடமொன்றை அமைக்க வேண்டும்;.

8) மிகவும் குறைந்தளவு வசதியுடனேயே இவ் வைத்தியசாலையில் மூலிகைத் தோட்டம்   உள்ளது.  இம் மூலிகை  தோட்டத்திற்கு கூடியளவு  நிதி  ஒதுக்கப்படுமாயின்  இன்னும்  சிறப்பாக  இம்  மூலிகை தோட்டத்தினை விருத்திசெய்ய முடியும் அல்லது வேறொரு இடத்தில் நிதியை ஒதுக்கி தனியான மூலிகை தோட்டத்தை திறன்பட அமைக்க வேண்டும்.  

இம்மாவட்ட வைத்தியசாலையில் இவ்வளவு குறைபாடுகள் இருந்தும், மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஆனாலும்  இம்மாவட்ட வைத்தியசாலையின் முன்னேற்றம் தொடர்பாக எமது கிழக்கு மாகாணசபை வருடா வருடம் முன்னேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாததையிட்டு  மிகவும் வெட்கமும், மனவேதனையும் அடைகின்றேன். தொடந்தும் இவ்வைத்தியசாலை சிறப்பாக செயல்பட இங்குள்ள தேவைகளை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.'

இதன் பிரதி கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .