2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மட்டு. இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கும் முகமாக இலங்கை கட்டுமாண கைத்தொழில் அமையம் மற்றும் ஜேர்மன் அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த நடமாடும் பயிற்சிநெறியொன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை, மட்டக்களப்பு, பிள்ளையாரடியில் உள்ள இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பயிற்சி நிலைய வளாகத்தில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜேர்மன் அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிருவாக மற்றும் நிதிப் பணிப்பாளர் டெப்ரா, கருத்து தெரிவிக்கையில், 'யுத்தத்தால் பாதிக்கப்பட்ட  மற்றும் இடம்பெயர்ந்தவர்கள், புதிதாகக் குடியமர்த்தப்பட்டவர்களினை பயிற்சிகளுக்குள் உட்படுத்தி சமாதானத்தைக் கட்டியெழுப்புவதுடன் அவர்களை சமூகத்தில் அந்தஸ்துள்ளவர்களாக மாற்றுவதற்காக ஜேர்மன் அரசாங்கத்தால் இப்பயிற்சிநெறி நடத்தப்படுகிறது.

எமது நிறுவனத்தின் பயிற்சி நெறிகளானவை இளம் ஆண் பெண்களுக்கு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் பயிற்சிகளை வழங்குதல், இவர்கள் மூலமாக அவர்களுடைய வாழ்நிலையை உயர்த்தி சமூகத்துக்குப் பயன்படக் கூடியவர்களாக்குவதுடன், சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் ஆகிய இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுகிறது.

தற்போது 7 பயிற்சி நிலையங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன. இதனை 10ஆக அதிகரிப்பதற்குத் திட்டமிட்டிருக்கிறோம். அதில் ஒன்று அம்பாறை மாவட்டத்திலும் இயங்கவுள்ளது. இப்பொழுது இந்தப் பயிற்சிகளில் மேசன், தச்சுவேலைகள், மின்சார இணைப்பு உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் இரும:பு வேலைகள், வர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல் போன்றவற்றினையும் சேர்க்கவுள்ளோம்.

தற்போது 3 மாத கால வகுப்பறைப் பயிற்சிகளுடன், 3 மாதகாலம் இலங்கை கட்டுமாண கைத்தொழில் அமையத்தின் வழிநடத்தலுடன், வெளிக்களப் பயிற்சிகளும் நடைபெற்று வருகின்றன. அதில் மேலும் பயன்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடமாடும் கணனிப்பிரவு இன்றுமுதல் சேர்க்கப்படுகிறது. டிசம்பர் வரையும் இந்த பயிற்சி நடைபெற்று மீண்டும் பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடப்பட்டு அதன் மேம்பாடுகள் குறித்துக் கலந்துரையாடி இன்னமும் இதனை முன்னேற்றவுள்ளோம்.

அதேநேரம் சர்வதேச தரம் மிக்க சான்றிதழ்களை பெற்றுக்கொடுப்பதுடன் தற்போது இலங்கை அரசாங்கத்தின் தொழில்நுட்பத் தரத்துடன் பதிவு செய்யப்பட்டும் உள்ளது. அத்துடன் என்.வி.க்கியூ தராதரத்துடன் எம்மிடம் பயிற்சி பெறுபவர்களை உருவாக்கி அவர்களை சர்வதேச தரத்துக்கு உருவாக்க வேண்டும் என்பதே எம்முடைய நோக்கமாகும்' என்றார்.

இன்றைய இந்த நடமாடும் கணனிப்பிரிவு ஆரம்ப நிகழ்வில், ஜேர்மன் அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் அமரசூரிய, ஆலோசகர் காமினி ஹேரத், இணைப்பாளர் ரி.லக்ஸ்மணன், லப்ரோவின் நிருவாக முகாமையாளர் கிசான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .