2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மக்கள் தொடர்ந்தும் அடிமைகளாக வாழ்வதற்கு அனுமதியேன்: ஜனாதிபதி

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ரி.லோஹித்)

'கருணா அம்மானும் ரணிலும் பேச்சுவார்த்தைகளை நடத்திய முக்கியமான பிரதேசத்துக்கு நான் இன்று வருகை தந்திருக்கிறேன். இலங்கையில் தமிழ் மக்கள் சம உரிமையுடனும் வாழ்வாதார மேம்பாட்டுடனும் வாழ வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். மக்கள் தொடர்ந்தும் அடிமைகளாக இருப்பதற்கு நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஒருங்கிணைக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டத்தினை மக்களிடம் கையளிக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவின் அழைப்பின் பேரில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, இன்று புதன்கிழமை பகல் நீர்வழங்கல் திட்டத்திற்கான நினைவுப் படிகல்லைத் திரைநீக்கம் செய்து வைத்ததுடன் நீர் வழங்கல் திட்டத்தையும் ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வீ.முரளிதரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரதி அமைச்சர் பஷீர் சேகுதாவூத், அமைச்சர் தயாரத்ன, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் ரீட்டா ஓ சலிவன், கிழக்கு மாகாண ஆளுநர் மொகான் விக்கிரம, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, 'கிழக்கு மாகாணத்தில் அதிகமான அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதனை நீங்கள் ஏனைய பிரதேசங்களுக்குச் சென்று பார்க்கும் போதே அறிந்து கொள்ள முடியும்.

கொழும்பை மட்டும் மையப்படுத்தியிருந்;த அபிவிருத்திகளை வடக்கில் கிளிநொச்சி, கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை என அனைத்துப் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தி மக்களை மேம்பாடடையச் செய்து கிராமம், நகரம், மாவட்டம் என முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வதே எமது நோக்கமாகும். இதற்காக மக்களாகிய உங்கள் அனைவரதும் ஒத்துழைப்புகளையும் தரும்போதுதான் அது மேலும் திறனுள்ளதாகக் கொண்டு செல்லப்படும்' என்றார்.


You May Also Like

  Comments - 0

  • meenavan Wednesday, 19 October 2011 09:56 PM

    ஜனாதிபதி அவர்களே? வாழ்வாதார மேம்பாடு என்பது தினமும் அதிகரிக்கும் வாழ்க்கை செலவு அதிகரிப்பை குறிக்குமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .