2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'குற்றச்செயல்களை தடுப்பதற்காக சிவில் பாதுகாப்புக்குழுக்கள் பலப்படுத்தப்படுகின்றன'

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 18 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும்; குற்றச்செயல்களை தடுப்பதற்காக சிவில் பாதுகாப்புக்குழுக்கள் பலப்படுத்தப்பட்டுவருவதாக கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார்.

மட்டக்களப்பு வின்சண்ட் மகளிர் உயர்தர பாடசாலை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள சிவில் பாதுகாப்புக்குழுக்களுக்கான மீளாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'தேசிய பாதுகாப்பை பலப்படுத்தவும் குற்றச்செயல்களை தடுக்கவும் ஊழல்களை ஒழித்து சிறந்ததொரு நாட்டை கட்டியெழுப்புவதற்காகவும் சிவில் பாதுகாப்புக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பொலிஸார் மீது பொதுமக்களுக்கு அன்று பயமும் நம்பிக்கையீனமும் இருந்ததோ, அதே பயமும் நம்பிக்கையீனமும் இன்றும் இருக்கின்றது. வடக்கு, கிழக்கு, தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் பொலிஸார் மீதான சந்தேகப்பார்வை மக்களுக்கு இன்னமும் உள்ளது. இதனால் குற்றச்செயல்கள் தொடர்பில் போதியளவு தகவல்களை பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்குவதில்லை.

இது மாற வேண்டும். பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நெருக்கம் ஏற்படவேண்டும். குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கவேண்டும். குற்றச்செயல்களை பொலிஸாரிடமே முறையிட வேண்டும். பொலிஸாரை தமது உடம்பிலுள்ள ஒரு கையை போன்று நினைத்துக்கொள்ள வேண்டும்.

பொலிஸ் திணைக்களம் யாருடைய சொந்தத் தேவைக்காகவும் உருவாக்கப்படவில்லை. இது மக்களின் தேவைக்காக உருவாக்கப்பட்டுள்ளது.  நாமும் நமது குழந்தைகளும் சுதந்திரமாக வாழவேண்டிய ஒரு நாடாக இது இருக்க வேண்டும். இதற்காக நாம் அனைவரும் பொலிஸாருக்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

சிவில் பாதுகாப்புக்குழுக்களின் நடவடிக்கையை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கொள்ளைகளை யாழ்ப்பாணத்திலிருந்தோ அல்லது இந்தியாவிலிருந்தோ அல்லது தெற்கிலிருந்தோ வந்தவர்கள் செய்யவில்லை. இங்குள்ள சமூக விரோதக் குழுக்களே இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளன.

இவ்வாறான கொள்ளைகள் உட்பட சமூக விரோத சம்பவங்களில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் சிவில் பாதுகாப்புக்குழுக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்க வேண்டும். சிவில் பாதுகாப்புக்குழுக்களுக்கு கிராம மட்டத்தில் காரியாலயங்களை அமைத்து செயற்பட முடியும் என்பதுடன், இறப்பர் முத்திரையையும் பயன்படுத்த முடியும்' என்றார். 

இந்தக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீர்த்தா பிரபாகரன், பிரதி மேயர் ஜோர்ஜ்பிள்ளை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.துரைராஜசிங்கம், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X