2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

உயிரை விடவும் உடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தன்மை மாற்றமடைய வேண்டும்: திருமதி சார்ள்ஸ்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


அனர்த்தங்களின்போது மக்கள் தமது உயிரை விடவும் உடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தன்மைகள் காணப்படுகின்றன. இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செலயகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் இன்பராஜன் தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் உரையாற்றும்போதே அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்...

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையில் ஏற்படும் அனைத்துவிதமான இயற்கை அனர்த்தங்களையும் எதிர்கொள்ளும் நிலையிலேயே உள்ளது. கடந்த வாரத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின்போது பலவந்தமாக ஒருசில குறிப்பிட்ட பிரதேசங்களிலிருந்து பொதுமக்களை வெளியேற்றவேண்டிய நிலை ஏற்பட்டது.

விலங்குகள், பறவைகள், மீன்கள் கூட இயற்கையினால் ஏற்படப்போகும் அனர்த்தங்கள் குறித்து அறிந்து கொண்டு வேறு இடங்களுக்குச் செல்லுதல் மற்றும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் செயற்பாட்டினைச் செய்கின்றன. ஆனால் அறிவுஜீவிகளான நாம் நம்மைப் பாதுகாக்கும் முன்னேற்பாடுகளை மேற்கொள்வதில் கவனக்குறைவாக இருக்கிறோம்.

இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்சம் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று நூல்களிலும் இந்த கடல்கோள் சுனாமி அனர்த்தங்கள் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலே மதுரையை கடல் கொண்டதாக இதிகாசங்கள் கூறுகின்றன. இதனை நாம் பல்வேறு அகழ்வாராய்ச்சிகளிலும் அறிந்து கொண்டிருக்கிறோம்.

இருந்த போதிலும் சுனாமியின் அழிவுகள் ஏற்படாத நாடுகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. ஜப்பானைப் பொறுத்தவரையில் வருடத்தில் இரண்டு அல்லது அதற்கும் மேற் சுனாமிப் பேரலைகள் ஏற்படுகின்றன. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பெரியதொரு சுனாமி அழிவு அங்கு ஏற்பட்டிருந்தது. இருந்தபோதிலும் அவ்வாறான அழிவுகளுக்கு முன்னாயத்தமாக இருப்பதனாலேயே அவர்களால் அதனைச் சமாளித்துக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சக்கட்டத்திற்கு வந்தாலும் அனர்த்தங்களுக்காக சிறப்பாக மேம்பாடடைகின்ற நிலைமை போதாமல் உள்ளது. அதுவும் மட்டக்களப்பு மாவட்டமானது, இலங்கையில் ஏற்படுகின்ற வெள்ளம், மினிசூறாவளி, வரட்சி என அனைத்து அனர்த்தங்களுக்கும் தொடர்ந்தும் உட்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் அனைத்து பெரிய ஆறுகளின் கழிமுகமாகவும், மணல் சார்ந்த பிரதேசமாகவும், அதே நேரம் ஆறுகளாலும், கழிமுகங்களாலும், நீரேரிகளாலும் சூழப்பட்டுள்ள பிரதேசமாக உள்ளது.

இதனை எமது குடியிருப்புகளையும், வாழ்வாதாரத்தையும் அமைத்துக் கொள்ளும்போது மிகுந்த தொழில்நுட்ப அறிவுடன் அனர்த்தங்களுக்கு எதிர்கொள்ளக் கூடிய வகையிலும் அவற்றிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வகையிலும் அமைத்துக் கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது.

அத்துடன் அனர்த்தங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வுகள் மிகக் குறைவாகக் காணப்படுகிறது. தற்போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின்போது பல இடங்களில் பலவந்தமாக பொது மக்களை பொலிஸார், இராணுவத்தினரது உதவியுடன் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

நான்குபேர் இம் மாவட்டத்தில் உயிரிழந்திருக்கிறார்கள். அதற்கு அவர்களது மனங்களில் காணப்பட்ட அசட்டையான செயற்பாடுகளே காரணமாகும். வெள்ளம் பெருக்கெடுத்துக் கொண்டிருந்த வேளை பலர் இந்த ஆற்றுப் பிரதேசங்களில் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விலங்குகளுக்கிருக்கின்ற அனர்த்தங்கள் குறித்த விழிப்புணர்வு மனிதர்களிடம் மிக்க குறைவாகக் காணப்படுகின்றமைதான் அதிகளவான உயிரிழப்புக்குக் காரணமாக அமைகின்றன.

அனர்த்தங்களின்போது மக்கள் தமது உயிரை விடவும் உடமைகளுக்கு முக்கித்துவம் கொடுக்கும் தன்மைகள் காணப்படுகின்றன. இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

அரசாங்க உத்தியோகத்தர்களைப் பொறத்தவரையில் உதவி செய்யும் மனப்பான்மை மிகக் குறைவாகக் காணப்படுகின்றது. இந்த மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அவ்வாறு தமது வேலை நேரத்தின் பின்னர் உதவி செய்கின்ற நிலைமையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அவ்வாறான செயற்பாடுகள் அனர்த்தங்களின்போது மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக இருக்கும்.

இன்றைய நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், உதவி மாவட்டச் செயலாளர் வாசுதேவன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், திணைக்களத் தலைவர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலநது கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .