2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தன்னிச்சையான முடிவுகள் தமிழ்த் தேசியத்திற்கு செய்யும் துரோகமாகும்: இரா.துரைரெட்ணம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

தமிழ்த் தேசியத்திற்காக செய்த  தியாகங்களை   வாக்குகளாகப் பெற்ற நாம் இதய சுத்தியுடனே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். தன்னிச்சையான முடிவுகள் தமிழ்த் தேசியத்திற்கு செய்யும் துரோகமாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் ஒற்றுமையின் அவசியம் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'தமிழ் மக்களின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் நல்லாட்சிமுறைமைக்கான தலைமைத்;துவத்தை உருவாக்க முன்னின்று உழைப்பதை விடுத்து  ஒருகட்சி சார்ந்த பக்கச்சார்பான தனி நபர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது உடன் நிறுத்தப்படல் வேண்டும்.

இவ்வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்  உள்ள சகல கட்சிகளும் பேசி தெளிவான முடிவுகளை எடுக்க இதயசுத்தியுடன் முன்வரவேண்டும்.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் தமிழ்த் தேசியத்தின் விடுதலை என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே ஒன்றிணைந்துள்ளன. ஆயினும் எம்மிடையே ஒரு கட்;சிச் சர்வாதிகாரம் மேலோங்கி நிற்பதும் ஜனநாயக உரிமையும் பன்முகத்தன்மையும் பேணப்படாமையும்  காரணமாக நீறுபூத்த  நெருப்பாக இருந்த நீண்டகால முரண்பாடுகளும் ஜனநாயக மறுதலிப்புகளும் இக்கட்டமைப்பை வெடிப்பு நிலைக்கு இட்டுச் செல்கின்றதா என்ற ஐயம் தோன்றியுள்ளது.

வட மாகாணத் தேர்தல் மூலம் வடக்கு மக்கள் தங்களுக்கு நிகழ்ந்த அநீதிகளுக்கும் அவமானங்களுக்கும் தங்கள் வாக்குப் பலத்தின் மூலம் தகுந்தபாடம் புகட்டியுள்ளனர். அத்துடன் தங்கள் உரிமைகள் அபிலாஷைகள் தொடர்பாக  அரசிற்கும் சர்வதேசத்திற்கும் மீண்டும் ஒரு முறை ஜனநாயக ரீதியாகத் தெளிவுபடுத்தியுள்ளனர்;. இவற்றிற்;கெல்லாம் அப்பால் தமிழர்களது நீண்டகால ஆயுதப் போராட்டத்தினையும் அதற்கான காரணங்களையும் நியாயப்படுத்தியும் உள்ளனர்.

இவற்றின் மூலம் தமிழ்த் தேசியம் தமது போராட்டத் தியாகத்தின் பெயரால் போராட்டத்திற்கு வெளியில் இருந்த பல திறமைசாலிகளை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் அரசியலுக்கு அறிமுகப்படுத்தியும் உள்ளது. தமிழரின் அரசியல் இருப்புக்காகப் போராடிய பல கட்சிகளைச் சேர்ந்த நாம் ஒன்று சேர்ந்து சர்வதேசத்திற்கும் இலங்கை அரசிற்கும்  தமிழ் தேசியத்தின் அங்கலாய்பை இத்தேர்தல் மூலம் இன்று வெளிகாட்டியிருந்தபோதும் எம்மிடையே இருந்த பலம், பலவீனம் காரணமாக தனிநபர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. பல கட்சிகளின் கூட்டுமுயற்சியில் ஸ்தாபிக்கப்பட்ட கூட்டமைப்பிற்குள் ஒருகட்சியின் மேலாதிக்கப் போக்கும் ஏதேச்சதிகாரப் போக்கும் முரண்பாட்டை தோற்றுவித்துள்ளன.

இந்த நிலையில் உரிமைகள் தொடர்பாகவும் சலுகைகள் தொர்பாகவும் பேசுவோர், பதவிகள் தொடர்பாக தமிழர் போராட்டத்தில் தங்கள் நிலை தொடர்பாக ஒருகணம் தம்மை சுயமதிப்பீடு செய்து கொள்ளவேண்டும்;.

அதேவேளை, தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்ததன் மூலம்  சிங்கள மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் ஒரு தெளிவான செய்தியை முன்னுதாரணமாக்கி உள்ளனர்;.  நாம் எவருக்கும் எதிரானவர்கள் அல்லர். எமது உரிமைக்காகவே போராடுகின்றோம்.

இதேவேளை, காலத்திற்கு காலம் தமிழர் தீர்வுத் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதால்  தமிழ் தலைமைகள் நம்பிக்கையீனம் கொண்டு சர்வதேசத்தின் ஆதரவை நாடவேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் வடபுலத் தேர்தல் மூலம் இந்தநிலை மாற்றம் உருவாவதற்கு அரசின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

ஆயினும் தமிழரின் ஐக்கியத்தையும் தமிழ்த் தேசியத்தின் உணர்வலைகளையும் தமிழர் போராட்டத்தின் இழப்புக்களையும் அவலங்களையும் அதை விட மேலான தியாகங்களையும் அர்த்தமற்றதாக்கிவிடக்கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தற்சமயம் தலைமைகள் கூடி பேசாமல் எழுந்துள்ள உட்கட்சி தற்காலிக முரண்பாடுகளையும் சிக்கல்களையும் தனிநபர் மேற்கொள்ளும் எழுந்தமானமான முடிவுகளையும் முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு உடனடியாகக் கூடிப்பேசி தமிழ் மக்களின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் நல்லாட்சி முறைமைக்கான தலைமைத்துவம் ஒன்றை உருவாக்க முன்னின்று உழைப்போம்.

எமது மக்கள் தமிழ்த் தேசியத்திற்காகச் செய்த  தியாகங்களை  வாக்குகளாகப் பெற்ற நாம், இதய சுத்தியுடனே தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டும.; இதனைக் கொச்சைப்படுத்தும் தன்னிச்சையான முடிவுகள் தமிழ்த் தேசியத்திற்கு செய்யும் துரோகமாகும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைபில் அங்கம் வகிக்கும்  கட்சித்தலைமைகள் ஒன்றுகூடி கூட்டான ஐக்கிய அறிக்கையை வெளியிட முன்வரவேண்டும். இதற்கு மாறாக எடுக்கும் முடிவுகள் கிழக்கு மக்களின் அபிலாஷைகளையும் தியாகங்களையும் குழி தோண்டிப் புதைப்பதாக அமையும்' என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .