2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஊழல் நடைபெறுவது தொடர்பாக நிரூபித்தால் பதவி விலகத் தயார்: கி.ப. கழக துணைவேந்தர்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 07 , பி.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்
 
கிழக்குப் பல்கலைக்கழகம் மீது சேறுபூசும் செயற்பாட்டில் ஈடுபடுவதை விடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பௌதீக மற்றும் கல்வி ரீதியாக வளர்ச்சியடைந்துவருவதை ஊக்குவிப்பவர்களாக இருக்கவேண்டும் எனத் தெரிவித்த கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி கிட்னன் கோபிந்தராஜா, எனது நிருவாகத்தில் ஊழல் நடைபெறுவது தொடர்பாக நிரூபித்தால் உடனடியாகவே பதவி விலகத் தயார் எனவும் சவால் விடுத்தார்.
 
கிழக்குப் பல்கலைக்கழகம் குறித்து மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர ஒருவரின் குற்றச்சாட்டுகளுக்கு கூற்றுக்கு பதிலளிக்கு முகமாகவே அவர் மேற்படி குறிப்பிட்டார். இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.
 
இதன்போது, கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் கே.மகேசன், வர்த்தக முகாமைத்துவ பீட பீடாதிபதி கலாநிதி என் லோகேஸ்வரன், கலைப்பீடாதிபதி கலாநிதி கே.ராஜேந்திரம், சௌக்கிய பராமரிப்பு பீட பீடாதிபதி வைத்தியக்கலாநிதி ரி.சுந்தரேசன், விவசாயப்பீடாதிபதி கலாநிதி எஸ்.சுதர்சன், விஞ்ஞானபீட பதில் பீடாதிபதி கலாநிதி திருமதி முத்துலட்சுமி வினோபாவா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
 
இங்கு கருத்துத் தெரிவித்த துணைவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா,

 கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பாரிய ஊழல் இடம்பெறுவதாகவும் அதனைத் தடுத்து நிறுத்த ஆணைக்குழு நியமிக்குமாறும் கேட்டுக்கொண்டதாக வெளியான செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றது. 
 
கடந்த 30 வருட யுத்தத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு பின்தங்கியிருந்த எமது பல்கலைக்கழகமானது கடந்த சில வருடங்களாக எனது நிருவாகத்தின் கீழ் மிகவும் சிறப்பான முறையில் அபிவிருத்தியடைந்து வருவது யாவரும் அறிந்ததே. எமது பல்கலைக்கழக அபிவிருத்தியில் அரசாங்கமும் உயர் கல்வி அமைச்சரும் பாரபட்சமின்றி வழங்கி வரும் உதவிகளுக்கு நன்றிகளைத் தெரிவிக்கும் அதேவேளை,  நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தானது பல்கலைக்கழக அபிவிருத்தியினை குழப்புவதை உள்நோக்கமாகக் கொண்டதாகவே பார்க்கப்படவேண்டியுள்ளது.
 
பல்கலைக்கழக அபிவிருத்திகளை திட்டமிட்டு குழப்புவதற்காக செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒருசில விரிவுரையாளர்களின் பொய்ப் பிரசாரங்களை நம்பிக் கொண்டு அதுவிடயமாக ஆராயாமல் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இப்படி கூறியிருப்பது கவலையளிக்கின்றது.
 
கிழக்குப் பல்கலைக்கழக அபிவிருத்திகள் சம்பந்தமாகவோ அல்லது நிருவாக செயற்பாடுகள் சம்பந்தமாகவோ நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்திருந்தால் அவர் முதலில் பல்கலைக்கழக நிருவாகத்தினரோடு தொடர்பு கொண்டு உண்மையினை அறிந்து கொண்டிருக்க வேண்டும்.
 
கௌரவ நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தானது எமது நிருவாகத்தின் மீதும் தனிப்பட்ட முறையில் சேறுபூசுவதாக அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறுக்கு வழியில் உயர்கல்வியமைச்சில் கடமையாற்றும் சில அதிகாரிகளை அணுகி, அதன் மூலம் தனது மகளுக்கு விவசாய பீடத்தில்  நிரந்தர விரிவுரையாளர் பதவி பெற முயற்சி செய்து அது தோல்வியடைந்த நிலையில்தான் இவ்வாறான அறிக்கையினை விட்டிருக்கின்றார் என்றே எண்ணத்தோன்றுகின்றது.
 
மக்களின் உரிமைகளுக்காக போராடுகின்றோம் என்று அரசாங்கத்திற்கு எதிரான அறிக்கைகளை தமிழ்ப் பத்திரிகைகளுக்கு மாத்திரம் விடுத்துக் கொண்டு, பின் கதவு வழியாக அரசாங்க அமைச்சர்களை அணுகி தங்கள் பிள்ளைகளுக்கும் குடும்ப உறவினர்களுக்கும் தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் நடவடிக்கைகளை மக்கள் நன்கு விளங்கியிருப்பார்கள் என்பது எனது திடமான நம்பிக்கையாகும்.
 
கிழக்கு பல்கலைக்கழகத்தின் நியமனங்கள் அனைத்தும் பக்கச்சார்பற்ற முறையில்  திறமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. எனது பதவிக்காலத்திற்கு முன்பு கடமையாற்றிய ஆறு உபவேந்தர்களும் தமது பதவிக்காலம் முடிவடையும் முன்பு இங்குள்ள சிலரால் திட்டமிட்டு துரத்தப்பட்ட வரலாறு மட்டக்களப்பு மக்கள் அறிந்ததே. அந்த வகையில் ஏழாவது உபவேந்தரான என்னையும் எனது பதவிக்காலம் முடியும் முன் துரத்திவிட திட்டமிட்டு செயற்படும் சில தீய சக்திகளுடன் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களும் இணைந்துள்ளமை மிகுந்த வேதனையளிக்கின்றது.
 
கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டட வேலைகள் சம்பந்தமாக கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு உபவேந்தர் என்ற வகையில் எனக்குள்ளது.கடந்த வருடத்தின் ஜுலை மாதத்தில் கௌரவ உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க அவர்களினால் அடிக்கல் நடப்பட்ட கட்டட வேலைகள் இப்போது பிள்ளையாரடியில் முழுவேகத்துடன் நடைபெற்று வருகின்றன.
 
இந்நிலையில் இரண்டு லோட் மண்கள் மாத்திரம்தான் இதுவரை வந்து சேர்ந்துள்ளது என்று கூறியிருப்பது மக்கள் மத்தியில் பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயலாகவே பார்க்கப்படவேண்டியுள்ளது. கட்டட ஒப்பந்த காரர்களுக்கு வேலைகளை ஒப்படைப்பதற்கு முன்பு அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசங்கள் தேவைப்படுவது யாவரும் அறிந்ததே. இந்த அடிப்படை நியதிகளைக் கூட விளங்கிக் கொள்ள முடியாமல் ஒருசில விரிவுரையாளர்கள் மூலமாக கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் வழிநடத்தப்பட்டிருக்கின்றார் என்றே எண்ணத்தோன்றுகின்றது.
 
கிழக்குப் பல்கலைக்கழத்திலும், திருகோணமலை வளாகத்திலும் மற்றும் சுவாமி விபுலானந்த நிறுவகம் மற்றும் மருத்துவ பீடத்திலும் நடைபெற்று வருகின்ற பாரிய அபிவிருத்திகளை கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ஒருமுறையேனும் பார்த்திருப்பாரேயானால் இவ்வாறானதொரு தவறான கருத்தினை வெளியிட்டிருக்கமாட்டார்.
 
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில் நடைபெற்று வந்த ஊழல்கள் அனைத்தும் எமது நிருவாகத்தின் கீழ் முற்றுமுழுதாக ஒழிக்கப்பட்டு கல்விசார் நடவடிக்கைகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருவது இன்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.
 
இதுபோன்ற சேறு பூசுகின்ற உரைகளோ, அறிக்கைகளோ எமது பல்கலைக்கழக அபிவிருத்திக்கான பயணத்தில் எதுவித பாதிப்புகளையும் ஏற்படுத்தப்போவதில்லை. கிழக்குப் பல்கலைக்கழகத்தை உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக மாற்றி, எமது மாணவர்களுக்கும் எமது பிராந்தியத்திற்கும் சிறந்த சேவைகளை வழங்கும் எமது உறுதியான நோக்கம் எவ் இடையூறுகள் வந்தபோதிலும் தளராமல் தொடரும் எனத் தெரிவித்தார்.
 
இதன்போது பல்கலைக்கழகத்தின் அனைத்துபீடங்களிலும் நடைபெற்று வரும் அபிவிருத்தி செயற்பாடுகள், பௌதீக ரீதியான, கல்வி ரீதியான மேம்பாடுகள் குறித்து பதிவாளர், பீடாதிபதிகளும் கருத்துக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .