2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வட, கிழக்கை இராணுவ பிடியில் அரசாங்கம் வைத்திருக்கிறது: ஜனா

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் ,தேவ அச்சுதன்

ஆயுதப் போராட்டம் மௌனித்து 5 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையிலும் வடக்கையும் கிழக்கையும் இராணுவ பிடிக்குள் அரசாங்கம் வைத்திருக்கின்றது. அதனாலேயே, வடக்கில் இராணுவ அதிகாரியையும் கிழக்கில் கடற்படை அதிகாரியையும் ஆளுநர்களாக வைத்துள்ளது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஞாயிற்றுக்கிழமை (06) மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட இளைஞர் விவசாயத்திட்டம் எனும் கிராமத்தில் மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

அரசாங்கத்தின் அபிவிருத்தி எனும் கண்ணோட்டத்தில் புறக்கணிக்கப்பட்டு இருக்கும் கிராமங்களில் இந்த இளைஞர் விவசாயத்திட்ட கிராமமும் ஒன்றாகும். பின்தள்ளப்பட்ட கிராமங்கள் என்றென்றும் ஒதுக்கி வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

கடந்த காலங்களில் எமது மக்கள் குண்டு வெடிச் சத்தங்களுக்குள்ளும், பீரேங்கிக் குண்டுகளுக்குள்ளும், பயந்து கொண்டிருந்தார்கள்;, ஆனால் தற்போது இந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் குறிப்பாக படுவாங்கரை வாழ் பொதுமக்கள் காட்டு யானைகளினால் பல தாக்குதல்களுக்கும் பீதிக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

தற்போதைய நிலையில் படுவான்கரை மக்கள் தங்களது வீடுகளையும் தமது வாழ்வாதாரப் பயிர்களையும் விட்டு விட்டு இரவு வேளைகளில் இடம்பெயந்து வாழும் சூழல் உருவாயிருப்பதனையிட்டு மிகுந்த கவலை அடைகின்றோம்' என்றார்.

பயங்கரவாதத்தினைக் கட்டுப்படுத்தி விட்டோம், குண்டுச் சத்தங்களை நிறுத்தி விட்மோம் இந்த நாட்டில் ஜனநாயகம் நடக்கின்றது, மக்கள் சுதந்திரமாக இருக்கின்றார்கள், ஒரே தேசத்திற்குள் சிறுபான்மை இனம் இல்லை. நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கின்றோம் எனக் கூறிக்கொண்டுத் திரியும் அரசாங்கம், காட்டுப் பகுதியினை அண்டிய தமிழ் கிராம மக்கள் படும் துன்பங்களைப் பார்த்துக்கொண்டும் அலட்சியப் போக்கினைக் கடைபிடிக்கின்றது.

யானையொன்றை கொன்றால் அதற்கு தண்டமாக 3 இலட்சம், யானை மனிதனை அடித்துக் கொன்றுவிட்டால் அவருக்கு இழப்பீடு ஒரு இலட்சம் என்று கணக்கு பார்க்கும் நாடுதான் இந்த நாடு. எமது மக்கள் எதிர்காலத்தில் ஒரு விடயத்தினைச் சிந்திக்க வேண்டும்.

இந்த நாட்டிலே போராடிய ஒரு இனம் இன்றும் அவர்களது உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டுதான் இருக்கின்றது. சுதந்திரம் கிடைத்தது என்பது இந்தப் பேரினவாதிகள் கூறும் அவர்களது பசப்பு வார்த்தைகள் மாத்திரம்தான்.

எதிர் காலத்தில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் புத்துயிர் விட்டு எழக்கூடாது, அவர்களது இனப்பரம்பலைத் தடுக்க வேண்டும், என நினைத்துக் கொண்டு இந்த அரசாங்கம் ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கின்றது.

ஆயுதப் போராட்டம் மௌனித்தாலும் எங்களது உரிமைப் போராட்டம், தமிழ் மக்களின் உரிமைகள் கிடைக்கப் பெறும் வரை அகிம்சை ரீதியாகப் போராடித்தான் ஆகவேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .