2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிரதேச வளர்ச்சி மக்களின் சேமிப்பில் தங்கியுள்ளது

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

ஒவ்வொரு பிரதேசத்தினுடைய வளர்ச்சியானது அங்குள்ள மக்களின் சேமிப்பிலேயே தங்கியுள்ளதென மட்டக்களப்பு மவாட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தெரிவித்தார்.

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், 'திவிநெகும' (வாழ்வின் எழுச்சி) புதுவருடச் சந்தை வெல்லாவெளி பொது விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (08) ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'வாழ்வின் எழுச்சித் திட்டமானது  இலங்கையிலுள்ள ஒவ்வொரு குடும்பங்களும் ஏதோவொன்றை   உற்பத்தி செய்பவர்களாக  மாற்றமடைய வேண்டுமென்பதேயாகும். மக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் நாட்டின் உற்பத்தியை  எதிர்காலத்தில் அடையக்கூடிய விதத்தில்  நாங்களும் மாற்றமடைய வேண்டும்.

முக்கியமாக வெளிநாடுகளில் நுகர்வுப் பொருட்களுக்குரிய கேள்விகளில் தங்கியிருப்போமாயின்;,  எமது மக்களுடைய எதிர்காலம் சிறந்த நிலையை அடைய முடியாது போய்விடும். அதேபோல், ஒவ்வொரு கிராமமும்   சிறந்த வளர்ச்சியை  அடைய வேண்டுமாயின், அங்கு செய்யப்படுகின்ற உற்பத்திகள் அக்கிராமங்களின் தேவைகளை நிறைவேற்றக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இதனால், அக்கிராமங்கள் மாத்திரமின்றி அப்பிரதேசமும் வளமிக்கதாக மாறும்.

எதிர்காலத்தில் கிராமங்களிலுள்ள ஒவ்வொரு குடும்ப அலகும் தங்களுடைய வீட்டுச் சூழலில் உற்பத்திகளை பெருக்கக்கூடியவர்களாக இருந்தால், சேமிப்பு மூலம் பயனடையக் கூடியதாக அமையும்.

பிற மாவட்டங்கள் மிகவும் செழிப்புடையதாகக் காணப்படுகின்றன. ஏனெனில், அம்மாவட்டங்களிலுள்ள  மக்கள் தங்களது வருவாயை ஏதோவொரு தொழில் முயற்சியில்; ஈடுபட்டு அதிகரித்துக் கொள்கின்றனர்.   ஆனால், எமது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களைப் பொறுத்தவரையில்  அவர்களது கையில் காசு கிடைத்தால் அதனை எவ்வாறு செலவு செய்யலாமென்ற  எண்ணமே அவர்களிடம் காணப்படுகின்றன. எனவே, எமது மக்கள் வீண் செலவுகளை கட்டுப்படுத்தி தேவையானவற்றுக்கு திட்டமிட்டுச் செலவளிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இதேவேளை, கிராம பொருளாதாரத்திலும் மாற்றத்தை கொண்டுவருபவர்களாக இருக்க வேண்டும்.

திவிநெகும செயற்பாடுகள் எமது மாவட்டத்தில் எதிர்காலத்தில் நல்ல உற்பத்திகளை ஊக்குவிக்கக் கூடியதாகவும் எமது கிராமங்களின் பொருளாதாரங்களை மேம்படுத்தக் கூடியதாகவும் அமைய வேண்டும்.

இவற்றுக்கேற்ப தற்போதுள்ள  சமுர்த்தி திணைக்களத்தின் செயற்பாடுகளும் பொருளாதார அமைச்சின் கீழ் செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற திவிநெகும செயற்றிட்டமும் மிகவும் முக்கியமான இரு செயற்பாடுகளாக இருந்து மக்களை ஊக்குவிக்கக் கூடியதாக செயற்படுகின்றன' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .