2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'முஸ்லிம்கள் விடுதலைக்காகவும் சுதந்திரத்துக்காகவும் பாடுபட்டவர்கள்'

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


முஸ்லிம்கள் இந்த நாட்டின் விடுதலைக்காகவும் சுதந்திரத்துக்காகவும் அர்ப்பணிப்புடன் பாடுபட்டவர்கள். முஸ்லிம்கள் என்றும் நாட்டுப்பற்றுடனேயே வாழ்ந்து வருகின்றனர் என்பதை பெருந்தேசியவாதிகளான பொது பல சேனா போன்றவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என ஊக்குவிப்பு உற்பத்தித்திறன் விருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

புதிய காத்தான்குடி அஸ்ஸஹ்றா மற்றும் ஹிஸ்புல்லாஹ், ஹெப்பி கிட்ஸ் பாலர் பாடசாலைகளின் கைப்பணிக் கண்காட்சியின் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'இன்று முஸ்லிம்கள் பொதுபல சேனா போன்ற பெருந்தேசியவாதிகளினால் அச்சுறுத்தப்படுகின்றனர். முஸ்லிம்கள் தமது மார்க்க கலாசாரத்தை பின்பற்றுவதை இந்த பெருந்தேசியவாதிகள் எதிர்க்கின்றனர். முஸ்லிம்களின் மார்க்க அனுஷ்டானங்களை தடுத்து நிறுத்துவதிலும் இந்தச் சக்திகள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

முஸ்லிம்களுக்கு எதிராக பெருந்தேசியவாதிகளின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், காணிப்பிரச்சினைகள், திட்டமிட்ட வன்முறைகளும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இந்நிலையில்தான் முஸ்லிம்கள் இந்த நாட்டுக்காக செய்த தியாகத்தையும் இந்த நாட்டின் சுதந்திரத்துக்காக முஸ்லிம்கள் பாடுபட்டதையும் நிரூபிக்க வேண்டிய காலத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம்.

இலங்கைக்கு ஏற்பட்ட அனைத்து அச்சுறுத்தல்களின்போதும் முஸ்லிம்கள் நாட்டுப்பற்றுடன் செயற்பட்டுள்ளார்கள் என்பதை இந்த பொது பல சேனா போன்ற சக்திகள் விளங்கிக்கொள்ள வேண்டும். ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டின் சுதந்திரத்துக்காக 4000 முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளனர். முஸ்லிம்கள் ஒருபோதுமே இந்த நாட்டை காட்டிக்கொடுத்து செயற்பட்ட வரலாறு கிடையாது. கண்டி சிங்கள அரசனின் உயிரை பாதுகாப்பதிலும் முஸ்லிம் பெண்மனி ஒருவர் அன்று செயற்பட்டுள்ளார் எனும் வரலாற்றை இவர்களுக்கு இன்று சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

மாவனல்லைக்கும் கொழும்புக்குமிடையிலுள்ள வீதியில் காணப்படும் மலையொன்றுக்கு உதுமான் மலை என்ற பெயருள்ளது. அந்த பெயர் தாங்கிய உதுமான் எனப்படுபவர் இந்த நாட்டுக்கான ஒரு சுதந்திர போராளியாகும்.

இன்றைய நூதனசாலை அமைந்துள்ள இடம் முஸ்லிம்களுடைய இடமாகும். அதேபோன்று கொழும்பு துறைமுகம் அமைந்துள்ள பகுதி மரைக்கார் எனும் முஸ்லிமுக்குரிய இடமாகும். இந்த நாட்டில் பணப்புழக்கத்தை செய்தவர்கள் முஸ்லிம்களேயாகும். நாட்டின் உயர்ச்சிக்கும் இந்த நாட்டின் சுதந்திரத்துக்கும் அர்ப்பணிப்புடன் முஸ்லிம்கள் உழைத்துள்ளார்கள்.

முஸ்லிம்கள் இந்த நாட்டில்  தனி ஈழம், தனி நாடு கேட்கவில்லை. இந்த நாட்டை காட்டிக்கொடுக்கவுமில்லை. ஆனால்,  முஸ்லிம்கள் பல்வேறு துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாகியே வருகின்றனர்.

வடமாகாணத்திலிருந்து ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். பள்ளிவாசல்களிலும் படுக்கைகளிலும் குழந்தைகள் முதல் ஆண்கள் பெண்கள் என முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய காணிகளை இழந்துள்ளார்கள்.

பல முஸ்லிம் கிராமங்களை விட்டு முஸ்லிம்கள் துரத்தி அனுப்பப்பட்டார்கள். இன்னும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாத நிலையிலுள்ளார்கள் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டிய நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

முஸ்லிம் தலைவர்களான டி.பி.ஜாயா, சேர் றாசீக் பரீட், பதியுதீன் மஹ்மூத், எமது பெருந்தலைவர் அஸ்ரப் போன்றவர்கள் இந்த நாட்டுக்காக ஆற்றிய பாரிய பங்களிப்பையும் நாம் இந்த பேரினவாத சக்திகளுக்கு எடுத்துக்காட்ட வேண்டியுள்ளது. முஸ்லிம்கள் இந்த நாட்டு அனைத்து படைகளிலும் இருந்துள்ளனர். பொலிஸில் முஸ்லிம்களுள்ளனர்.

முஸ்லிம்கள் பலரும் இலங்கை இராணுவத்திலிருந்து இந்த நாட்டு;ககாக யுத்தத்தின்போது உயிர் நீத்துள்ளார்கள். இராணுவத்தில் முஸ்லிம்கள் பல பதவிகளிலும் இன்றும் பதவி வகிக்கின்றனர்.

இவ்வாறு முஸ்லிம்கள் இந்த நாட்டுக்காக நாட்டுப்பற்றுடன் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக விடுதலைக்காக ஆற்றிய பங்களிப்பை கூறவேண்டியுள்ளது.

அதற்காக கொழும்பில் பாரிய கண்காட்சியொன்றினை ஏற்பாடு செய்தால் அது சிறந்ததாக இருக்கும். அதன் மூலம் இந்த வரலாறுகளை நிரூபணம் செய்ய முடியும். முஸ்லிம்கள் இந்த நாட்டிற்காக ஆற்றிய பங்களிப்பை நிரூபணம் செய்ய வேண்டிய காலத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கிடையில் கொழும்பில் ஐந்து இலட்சம் முஸ்லிம்களை ஒன்றுகூட்டி முஸ்லிம்களின் பலத்தை காட்ட வேண்டும். அத்துடன் எமது வரலாற்றையும் கூறவேண்டும்.  இவற்றை அரசியல்வாதிகளால் மட்டும் செய்ய முடியாது. அரசியல்வாதிகள் அரசியல் நோக்கங்களுக்காக அடுத்த தேர்தலை இலக்காக வைத்து செயற்படுவார்கள். ஆனால், இவற்றை முஸ்லிம் சிவில் அமைப்;புக்கள் முன் நின்று செயற்படுத்த வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .