2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சர்வதேசத்தை தொடர்ந்து ஏமாற்ற முடியாது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

ஜெனிவா விசாரணைகளை நிராகரித்திருக்கின்றோம், வர விடமாட்டோம், என்றெல்லாம கூறி அரசாங்கம் சிங்கள மக்களை ஏமாற்றுகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.
 
களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் 48 வது வருடாந்த விளையாட்டு விழா சனிக்கிழமை மாலை(19) களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்;

2016 இல் பொன்விழா காணவிருக்கும் களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் கழகம் இக்கிராமத்தில் மட்டுமல்லாமல் ஏனைய அயல் கிராமங்களிலும் தன்னாலான பல சமூக சேவைகளை மேற்கொண்டு வருகின்றது. மட்டகளப்பு மாவட்டத்திலே சமூகத்துடன் ஒன்றிறைந்த சிறந்த கழகம் என்பதனை எம்மால் கூறமுடியும். காரணம் இக்கழகம் விளையாட்டுடன் மட்டுமல்லாமல் கல்வி, சுகாதாம் மற்றும் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகின்றது. இக்கழகம் மாத்திரம்தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான சேவைகளையும் புரிந்து கொண்டு சிறந்த முறையில் செயற்பட்டு வருகின்றது.

அபிவிருத்தி என்பது இறைமையுள்ள அரசாங்கத்தின் கடமை

இன்று எடுத்தற்கெல்லாம் அபிவிருத்தி என்று சொல்லுகின்றார்கள். ஆனால் அபிவிருதியை நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அபிவிருத்தி என்பது மனிதனுக்குத் தேவையான ஒன்று ஒரு இறைமையுள்ள அரசாங்கம் மனிதனுக்கு தேவையானவற்றைச் செய்து முடித்துதான் ஆகவேண்டும். பிள்ளைகள் படிப்பதற்கு பாடசாலை இல்லை என்றால் ஒரு இறைமையுள்ள அரசாங்கம் பாடசாலை கட்டிக் கொடுத்துத்தான் ஆகவேண்டும். அபிவிருத்திகளை அரசாங்கம் செய்துதான் ஆகவேண்டும். மாறாக மக்களின் தேவைகளைப் பூர்தி செய்பவர்கள் அரசியல் கட்சிகள் அல்ல மக்கள் எந்த அரசியல் கட்சியினை ஆட்சியமைத்து அரசாங்கம் அமைக்கின்றார்களோ அந்த அரசாங்கம்தான் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் பல்லினம் வாழுகின்ற ஒரு நாட்டிலே சிறுபான்மை இனம் தாக்கப்படுகின்றபோது சிறுபான்மை இனம் சார்பான அரசியல் வாதிகள் அரசாங்கத்துடன் அவ்வினத்துக்கு ஆதரவான அரசிடம் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சமமான முறையில் அனைவருக்கும் அனைத்து தேவைகளையும் பூர்தி செய்யுமாக இருந்தால், சிறுபான்மையின மக்களையும் ஏனையோரைப் போல் சமநிலையில் கவனிக்குமாக இருந்தால் இந்த நாட்டிலே ஒரு நாளும் பிரச்சனை தோன்றியிருக்க மாட்டாது.

சிறுபான்மையினருக்கு சம உரிமை வழங்கப்பட்டிருந்தால் யுத்தத்திற்கு இடமிருந்திருக்காது


1948ஆம் ஆண்டு காலப்பகுதியில்; இந்த நாடு சுதந்திரம் அடைந்ததும் சம உரிமை சிறுபான்மை இனத்திற்கு வழங்கப்பட்டிருந்தால் இந்த நாட்டிலே  நடைபெற்றிருந்த கொடும்போர் ஏற்பட்டிருக்க முடியாது. இந்த நாட்டில் ஏன் இந்த போர் நடைபெற்றது என்றால் இங்கே வாழுகின்ற சிறுபான்மையின மாக்களாகிய தமிழ் மக்களின் அபிலாசைகள் சுதந்திரம் அடைந்ததிலிருந்து தீர்க்கப் படவில்லை என்பதுதான் உண்மை.

இது இப்படி இருக்க இந்த சிறுபான்மை இனத்தின் அபிலாசை அபிவிருத்தி மட்டும்தானா? என்பது கேள்வியாக எழுந்திருக்கின்றது. இன்று சிங்கள மக்களிடம் அபிவிருதியினைக் காட்டியதை போன்று தமிழர்களிடத்தில் அபிவிருத்தியினைக் காட்டி ஏமாற்ற முடியாது.

அரசாங்கத்தினால் அல்லது அரசாங்கத்தினை ஆதரிக்கின்ற தமிழ் அரசியல் வாதிகளினால் ஒரு நாளும் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கச் செய்யமுடியாது. ஏனென்றால் அவர்கள் அபிலாசைகளை நம்பித்தான் இருக்கின்றார்கள். இவற்றினை தமிழ் மக்கள் பல தேர்தல்களிலே எடுத்துக் காட்டியிருக்கின்றார்கள்.

அபிவிருத்தியை காட்டி மக்களை ஏமாற்ற முடியாது

கடந்த மேல், தென் மாகாணசபைத் தேர்தல்களிலே ஜனாதிபதி அவர்களின் தேர் தல் மாவட்டமாகக் காணப்படுகின்ற அம்பாந்தோட்டையிலே அரசாங்கக் கட்சி பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது,  அங்கே அரசாங்கம் செய்யாத அபிவிருதியா? ஏன் அவர்கள் பின்தள்ளப்பட்டார்கள்? கொழும்பு மாநகரப் பகுதியில் அரசாங்கத்தின் வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளன. ஏன் அங்கு அபிவிருதிகள் நடைபெறவில்லையா?
அம்பாந்தோட்டையிலே சர்வதேச விமான நிலையம், சர்வதேச துறைமுகம், சர்வதேச விளையாட்டு அரங்கு என சர்வதேச தரத்தில் அபிவிருத்திகள் நடைபெற்ற அந்தப் பகுதியில் அரசாங்கம் வாக்குப் பெறுவதில் சற்று பின்னடைவை பெற்றிருக்கின்றது என்று சொன்னால் இந்த மட்டக்களப்பு மாவட்டத்திலே அபிவிருதியினைக் காட்டி அரசாங்கம் எவ்வாறு வாக்குகளைப் பெறலாம் என நாம் கேட்கின்றோம்.

ஒரு கிராமத்திற்கு 10 இலட்சம் ரூபாய் கொள்கை ரீதியிலே தேசிய ரீதியாக ஒதுக்கிடு செய்கின்ற பணம். இப்பணம் கருணா அம்மான் இல்லாவிட்டாலும், பிள்ளையான் இல்லாவிட்டாலும், நாங்கள் எம்பியாக இல்லாவிட்டாலும், அந்தப் பணம் வந்துதான் தீரும். அதைத் தடுப்பதற்கு எந்த அரசியல் வாதிகளாலும் முடியாது. ஏன் என்றால் அரசாங்கம் கொள்கையின் அடிப்படையில் இலங்கையிலுள்ள ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுக்கும் தலா 10 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இன்று அதனை நாங்கள் கொண்டு வந்தோம் என்று சிலபேர் கூறித்திரிகின்றார்கள். ஓவ்வாரு கிராமங்களுக்கும் சென்று கூட்டம் வைத்து 10 இலட்சம் ரூபாய் கொண்டு வந்திருக்கின்றோம் என்று கூறுகின்றார்கள். இது எந்த வகையில் பொருந்தும் என கேட்கின்றோம்.
 
போரினாலே பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கம் வீடுகளைக் கொடுத்திருக்கின்றது. அதிலே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 2000 வீடுகள், அம்பாறை மாவட்டத்திற்கு 1000 வீடுகள்,  திருகோணமலை மாவட்டத்திற்கு 1000, வீடுகள் வடமாகாணத்திற்கு 50000 வீடுகளைக் கொடுத்திருக்கின்ற இந்நிலையில் இந்த வீட்டுத்திட்டத்தினையும் நாங்கள் தான் கொண்டு வந்துள்ளோம் என ஒருசில அரசாங்க அடிவருடிகள் கூறித்திரிகின்றார்கள்.
 
அரசியல் கட்சி சார்ந்த எம்பிக்கள் இல்லாது விட்டாலும் கூட வீடுகள் பயனாளிகளுக்குக் கொடுக்கப்பட்டே தீரும். ஏனென்றால் இவைகளெல்லாம் ஒரு செய்ற்திட்டத்தின் அடிப்படையில் செய்யப்படுகின்ற வேலைகள் ஆனால் சில அரசியல்வாதிகள் சட்டத்தினை அவர்களது கையிலே எடுக்கின்றார்கள். இது மக்களுக்குத் தெரியாது. ஆகவே மக்களை ஏமாற்றுகின்ற பேர்வழிகளாக இருக்கின்றார்களே தவிர தமிழர்களின் அபிலாசைகளைப் பெறுவதில் அவர்களுக்கு எதுவித அக்கறையுமே கிடையாது.

தவறுகளை தட்டிக்கேட்பது தமிழ் தேசியக் கூட்டடைமைப்பு மட்டும்தான்

அவ்வாறு அக்கறை இருந்திருந்தால் இந்த நாட்டிலே பல விடயங்கள் நடைபெற்றிருக்கின்றன. அந்த விடையங்களை தட்டிக் கேட்கவும் இல்லை தட்டிக்கேட்க அவர்களுக்கு திராணியுமில்லை. கெவுளியாமடு கிராமத்தில் அத்துமீறிக் குடியேறிய பெரும்பான்மையினைத்தினைப் பற்றி யாரும் தட்டிக்கேட்கவில்லை ஆனால் அவற்றினைத் தட்டிக்கேட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தது தமிழ் தேசியக் கூட்டடைமைப்பு மட்டும்தான்.

மண்ணுக்காக போரிட்டவர்கள் எமது தமிழ் மண் பறிபோகின்றபோது பாராமுகமாக இன்று அரசாங்கத்தினை ஆதரித்துக் கொண்டுதான் தமிழ் அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள். ஒரு காலத்திலே தமிழ் மண் பறிபோகக் கூடாது என்பதற்காக போராடியவர்களும் அவர்களேதான்.

அண்மையில்  கிழக்கு மாகாண சபையினால் எழுது வினைஞர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஆகிய  இரண்டு நியமனங்கள் வழங்கிய பொழுது மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பதவிக்கு எவரும் நியமிக்கப் படவில்லை தமிழ் இனத்திற்கு மட்டக்களப்பிலே இப்படி நடைபெற்றிருக்கின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம்தான் தட்டிக்கேட்டது வேறுயாருமில்லை. இந்த அளவிற்கு தமிழ் இனத்திற்கு சோதனைகள் வேதனைகள் வருகின்ற போது அவற்றினையெல்லாம் தீர்த்து வைக்கின்ற பொறும்பும் கடமையும் உள்ளவர்களாகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் இருக்கின்றோம்.

சர்வதேசத்தை இம்முறை ஏமாற்ற முடியாது

தமிழர்களின் அபிலாசைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காக இன்றும் கூட போராடிக் கொண்டிருக்கின்றோம். ஒரு தடவை அல்ல இரண்டு தடவையல்ல 2014 இல் மூன்றாவது தடவையாகவும் ஜெனிவாவிலே சர்வதேசத்தின் வெற்றியினைப் பெற்றிருக்கின்றோம். அரசாங்கம் சிங்கள மக்களை ஏமாற்றுவதற்காக ஜெனிவா விசாரணைகளை நிராகரித்திருக்கின்றோம், வர விடமாட்டோம்,என்றெல்லாம் கூறுகின்றார்கள் ஆனால் இவையெல்லாம் சிங்கள மக்களை ஏமாற்றுகின்ற வித்தைகள், உண்மையான பொறியிலே இவர்கள் மாட்டப்பட்டிருக்கின்றார்கள். இந்த அரசிடம் சர்வதேச விசாரணை வேண்டும், விசாரணைக்கு வழிவிடுங்கள் என ஐக்கிய நாடுகள் சபை கேட்டிருக்கின்றது.

அவர்களுக்கு வழிசமைத்துக் கொடுக்காது விட்டால் அந்த வேலையினைச் செய்வது எப்படி என்று சர்வதேசத்திற்குத் தெரியும், சென்றமுறை ஏமாற்றியது போல் சர்வதேசத்தை இம்முறை ஏமாற்ற முடியாது. அந்த அளவிற்கு இன்று சர்வதேசம் ஒரு நல்ல உணர்வுடன் இருந்து கொண்டிருக்கின்றது. அந்த அளவிற்கு நாங்கள் சர்வதேச ரீதியாக இந்த பிரச்சனையினை கொண்டு சென்றது யார்? இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான்.

எனவே மக்கள் ஒன்றினை உணர்ந்து கொள்ள வேண்டும் யாரிடம் உண்மையான உணர்வு உள்ளது, யாரிம், போலி உறவு இருக்கின்றது என்பதனை ஆராய வேண்டும். ஆய்வு செய்யாமல் வெறுமனே அபிவிருத்திக்கு மட்டும் பின்னால் சென்றால் நான் நினைக்கின்றேன் அதுபோல் மடமைத்தனமான ஒரு செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

தற்போது நம் ஒரு இக்கட்டான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றோம். தென்னாபிரிக்காவுக்கு அரசாங்கமும் சென்றது நாங்களும் சென்றோம். அங்கிருந்தும் சில இராஜ தந்திரக் குழுக்கள் வர இருக்கின்றது அவர்கள் இந்த பிரச்சனைகளை ஆராயவுள்ளார்கள். பாதிக்கபட்ட இனத்திற்காக தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா போராடி வெற்றிகண்டார் அந்த வெற்றிகண்ட குழு இங்கு வரஇருக்கின்றது. அவஸ்த்தைப்படுகின்ற தமிழர்களுக்காக எந்த வகையிலே உதவலாம் என்தைப் பார்ப்பதற்கு அவர்கள் வருகை தரவுள்ளார்கள்.

கூட்டமைப்பினைத் தவிர வேறு யாரும் தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பவில்லை

இவற்றையெல்லாம் பார்க்கின்ற பொழுது இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினைத்தவிர எந்த ஒரு தமிழ் அமைப்பும் எந்த ஒரு அரசியல் வாதிகளும்; தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. வெறும் அபிவிருத்தி, அபிவிருத்தி என்று பாசாங்கு காட்டுகின்ற அரசியல் வாதிகள் இருக்கின்றார்களே தவிர உணர்வுடனும் உரிமையுடனும் போராடுகின்ற சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டும்;தான் இருக்கின்றது.
 
 
இந்த அபிவிருத்தி மட்டும் போதுமாக இருந்திருந்தால் தேவநாயகம் , நல்லையா மாஸ்டர், ஜி.ஜி.பொன்னம்பலம்  போன்றோர்களின் காலங்களில் இனப்பிரச்சனை தீர்ந்திருக்கும். அரசாங்கம் அபிவிருத்திகளை பூச்சாண்டி காட்டி தமிழ் மக்களின் இனப்பிரச்சனைத் தீர்வினை தீர்க்க முற்பாட்டால் அது அரசாங்கத்தின் ஒரு மடமைத்தனம் இவற்றினை விட சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை.
 
அபிலாசைகள் என்பது வேறு அபிவிருத்திகள் என்பது வேறு அபிலாசைகள் தீர்ந்த பின் அபிவிருத்திகள் செய்ய வேண்டிய பொறுப்பு நம்கையிலே வரும்.
 
ஆகவே நாங்களே எமது அபிவிருத்திகளைச் செய்கின்றவர்களாக மாறுவோம். இந்த நிலை வரும் வரை நாம் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருப்போம். ஆகவே பொறுமையுடன் இருப்போம் எமது அபிலாசைகள் தீரும்வரை காத்திருப்போம். ஆனால் அது வெகு தூரத்தில் இல்லை காலம் கனிந்து விட்டது. அந்தக் கனியை நாங்கள் ருசிக்க வேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை அது வெகு விரைவில் வந்து விட்டது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X