2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஆலயங்கள் எமது இனத்தின் அடையாளங்கள்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-த.நவோஜ்

எல்லைப்புற கிராமங்களின் ஆலயங்களை பாதுகாப்பதன் மூலமாகவே எமது மதத்தினதும் இனத்தினதும் பாரம்பரியத்தை பாதுகாக்க முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசங்களின் எல்லைப்புற ஆலயங்களுக்கு சென்று அவ்வாலயங்களின் நிலை பற்றி ஆலய நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய சந்தர்ப்பத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இன்று; எமது இனம் மாத்திரம் முடக்கப்படவில்லை. எமது கலை கலாச்சாரம் பாரம்பரியம் என எமது அடையாளங்கள் ஒவ்வொன்றாக பறிபோகக் கூடிய சூழ்நிலைதான் இந்நாட்டில் இருக்கின்றது.

கடந்த காலத்தில் நேரடியாக எமது இனத்தின் மீது அடக்குமுறையை பிரயோகித்தவர்கள் இன்றும் அதனையே மறைமுகமாக எமது அடையாள அழிப்பு மூலம் மேற்கொள்கின்றனர். அதுவும் எமது மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்த மட்டில் இவ்வாறான செயற்பாடுகள் அதிகளவில் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன.

திட்டமிட்ட காணி அபகரிப்புகள் திட்டமிட்ட குடியேற்றங்கள் அத்துடன் எமது ஆலயங்கள் உடைக்கப்படுகின்றன. அது மட்டுமல்லாது எமது தமிழர் பிரதேசங்களில் திடீரென பௌத்த விகாரைகள் முளைக்கின்றன. இவ்வாறு பல செயற்பாடுகள் எமது இனத்தினை முடக்குவதற்கு திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறான செயற்பாடுகளில் அதிகம் பாதிப்புறுவது எமது மாவட்டத்தில் எல்லைப்புற கிராமங்களே. இங்கு நடைபெறுகின்ற திட்டமிட்ட குடிப்பரம்பல் மூலம் எமது மத சின்னங்களும், மாற்றமுறும் நிலை தோன்றுகின்றது.

ஒரு இனத்தின் அடையாளங்கள் மாற்றப்படுகின்றபோது அந்த இனத்தின் வரலாறும் மாற்றமடையும் எமது வரலாற்றினை மாற்றுவதற்காகவே இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த விடயங்களில் எமது மாவட்ட எல்லைப்புற கிராம ஆலயங்களின் நிர்வாகத்தினர் மிக்க கவனமாக இருக்க வேண்டும்.

நாம் ஆலயத்தில் அரசியல் பேசவில்லை. ஆனால் தற்போது இந்த அரசாங்கம் மதங்களினூடாகவே தமது அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொள்கின்றது. எனவே நாங்களும் இங்கு அரசியல் பேசும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். எங்கேயோ இருக்கும் தென்னாபிரிக்கா எமது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளை அழைத்து பேச்சுவார்த்த மேற்கொள்கின்றது.

அதுவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் சமநிலை வகித்த நாடு அதுவே எமது தமிழர் பிரச்சனை தொடர்பிலான ஒரு பேச்சுவார்த்தையினை மேற்கொள்ளும் போது இந்த அரசாங்கத்தினால் எமக்கான ஒரு தீர்வை மேற்கொள்வதற்கு பேச்சுவார்த்தையினை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றது.

எமது மக்களின் சுயநிர்ணய உரிமைகளை அபிலாசைகளை பெற்றுக் கொடுப்பதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றும் போராடிவருகின்றது. எனவே இதற்கு எமது சின்னங்களை நாம் முதலில் பலப்படுத்த வேண்டும். எமது கலை கலாச்சார அடையாளங்களை நாம் பேணிப்பாதுகாக்க வேண்டும் இவற்றையெல்லாம் சிந்தித்து எமது மக்கள் செயற்பட வேண்டும் இதன் மூலமே எமது இலட்சியத்தினை நாம் அடைய முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X