2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மது விற்பனை அனுமதிப்பத்திரங்கள் மட்டக்களப்புக்கு மாற்றப்படுகின்றன: அரியநேத்திரன்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 04 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'மட்டக்களப்பு மாவட்ட வறுமை நிலைக்கும் மது பாவனைக்கும் தொடர்பு உள்ளது. எனவே, மது பாவனையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்திலும் மது பாவனைக்கு முற்றுப்புள்ளி என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தென் இலங்கையில் வழங்கப்படும் மது விற்பனை அனுமதிப்பத்திரங்கள், மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றன. அப்படியானால், மஹிந்த சிந்தனை மட்டக்களப்பில் மதுபான அதிகரிப்பும் தென்பகுதியில் மதுபாவனைக் குறைப்பும் என்பது தெளிவாக புலனாகிறது'

இவ்வாறு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன்  கூறினார்.

இது தொடர்பில் அவர்  நேற்று வியாழக்கிழமை மாலை மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

'மது பாவனையை குறைத்து மட்டக்களப்பை காப்பாற்றுங்கள் என்ற தொனிப்பொருளில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாதர் சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்திய கவனயீர்ப்பு போராட்டமும் அவர்களால் வெளியிடப்பட்ட மட்டக்களப்பில் மதுப் பாவனை பற்றிய புள்ளிவிபரங்களும் முற்றிலும் உண்மையானது. இது மட்டக்களப்பு மண்ணை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கும் விடயம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 54 மதுபானச்சாலைகளும் 31 மது பாவனை உணவகங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.  தற்போதும்  தென்பகுதியில் உள்ள மதுபான அனுமதிப்பத்திரங்களை மட்டக்களப்பிற்கு மாற்றுவதற்காக முயற்சிகளில் ஈடுபட்டுவருவதை அறியக்கூடியதாய் உள்ளது. இதற்கு அரசில் உள்ள சில அரசியல்வாதிகள் துணை போவதாகவும் அறியமுடிகிறது.  இதற்கு அரசாங்க அதிபரும் பிரதேச செயலாளர்களும் ஒருபோதும் உடன்படக்கூடாது.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதாரண உணவு விடுதிகள் திறக்கப்படுகின்றன. பின்னர் இவை சுற்றுலா பயணிகள் விடுதிகளாக மாற்றப்படுன்றன. அவ்வாறு மாற்றப்பட்ட பின்னர் அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகவே மது பாவனை அதிகரிக்கின்றது. அவ்வாறான நிலையில் வறுமை அதிகரிப்பது தவிர்க்க முடியாததாகும்.

எனவே, மதுபான விற்பனை நிலையங்களை குறைப்பதற்கு அரசியல் வேறுபாடுகளை மறந்து விசேட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதனை விடுத்து பாலங்களை அமைப்பதாலோ, வீதிகளை புனரமைப்பதாலோ சமுர்த்தி முத்திரைகளை குறைப்பதாலோ, மாதர் சங்கங்களுக்கு பணம் கொடுப்பதாலோ, வங்கிகள் திறப்பதாலோ, கிராமங்கள் தோறும் பத்து இலட்சம் வழங்குவதாலோ வறுமையை ஒழித்துவிட முடியாது.

விடுதலைப்புலிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளுகை செலுத்திய காலப்பகுதியில் படுவான்கரைப் பகுதியில் எந்த ஒரு மதுபானச்சாலைகளும் திறக்கப்படவில்லை. ஆனால் இன்று 10 இற்கும் மேற்பட்ட மதுபானச்சாலைகள் படுவான்கரை பிரதேசத்தில் திறக்கப்பட்டுள்ளன.

இதுதான் சமாதானம் என்பதை அனைவரும் புரியவேண்டும் வறுமை நிலையை ஏற்படுத்துவதற்கான மூலகாரணம் மதுபானசாலைகள்தான் என்பதை கருத்தில் எடுத்து தென்பகுதியில் இயங்கும் மதுபானச்சாலைகளின அனுமதியை மட்டக்களப்பிற்கு மாற்ற துணைபோகும்  அரசியல்வாதிகளின் கட்டளைக்கு மட்டக்களப்பு அரச அதிபர் செவிசாய்க்கக் கூடாது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையை ஒழிப்பதற்கு விசேட செயற்றிட்டம் ஒன்றை வகுத்து செயற்படுத்த வேண்டும்.  இதற்கு அரசியல் பேதங்களை மறந்து அரசியல்வாதிகள் அனைவரும் முன்வர வேண்டும். அதேபோன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் துணை நிற்க வேண்டும்.  
முள்ளிவாய்க்கால் போர் முடிவற்று சமாதானம் ஏற்பட்டதாக அரசாங்கம் கூறும் 5 வருடங்களில் மதுபானச்சாலைகள் அதிகரிக்கப்பட்ட விடயம் சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் பலமுறை நாடாளுமன்றத்திலும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டங்களிலும் சுட்டிக்காட்டி வந்துள்ளோம் அதை எவரும் கவனத்தில் எடுக்கவில்லை.

ஏற்கெனவே மட்டக்களப்பு அரசாங்க அதிபர் தெரிவித்துள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு 200 மில்லியன் ரூபா மட்டக்களப்பு மாவட்ட மக்கள் செலவு செய்கின்றனர்.  தற்போதுள்ள 85 மது பாவனை நிலையங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகையை கட்சி அரசியல் பேதமின்றி சமூக நலனை முன்நிறுத்தி அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .