2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'இன ஒற்றுமைக்காக ஏறாவூர் கல்வி அபிவிருத்தி நிறுவனம் உருவாக்கப்பட்டது'

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தமிழ், முஸ்லிம் ஆகிய இரண்டு சமூகங்களையும் இணைத்து இன ஒற்றுமையை கட்டியெழுப்பி அதனூடாக கல்வி அறிவை ஊட்டுவதற்காகவே ஏறாவூர் கல்வி அபிவிருத்தி நிறுவனம் ஏறாவூர் கலைமகள் வித்தியாலயத்துக்கு அருகில் நிறுவப்பட்டது என அந்நிறுவனத்தின் நிர்வாக உத்தியோகஸ்தர் எம்.எச்.எம்.சனூஸ் தெரிவித்தார்.

ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாணவர்கள், ஆசிரியர்கள் பாராட்டுவிழா, வித்தியாலய  அதிபர் எஸ்.தில்லைநாதன்  தலைமையில் இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'கல்விப்பணிகளுக்கூடாகவும் ஏனைய சமூக சேவைகளுக்கூடாகவும் ஏறாவூர் கல்வி அபிவிருத்தி நிறுவனம் தமிழ், முஸ்லிம் ஆகிய இரு சமூகங்களுக்கும் முடிந்தளவு பணியைச் செய்திருக்கின்றது.

எமது நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.எம்.அன்ஸார் இந்த கலைமகள் வித்தியாலயத்துக்கும் இங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கும் உதவுவதில் மிகுந்த அக்கறையோடு உள்ளார்.

கலைமகள் வித்தியாலயத்துக்கு குழாய்நீர் விநியோகமும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இந்தப் பாடசாலையில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களை முடிந்தளவுக்கு கல்வியில்  ஊக்கப்படுத்தி அவர்களை முன்னேற்றமடையச் செய்வதற்கு பல திட்டங்கள் இந்தப்பாடசாலை அதிபரால் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அதனை முடிந்தளவு நிறைவேற்றிக்கொடுப்பதற்கு எமது நிறுவனம் சித்தமாக இருக்கின்றது.

கல்வியில் திறமை காட்டுபவர்களை ஊக்குவிக்கும் முகமாக மாதாந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளை நாம் வழங்கி வருகின்றோம்.
அதேபோன்று கல்வியில் புலமை காட்டுவதற்காக மாணவர்களை ஊக்குவிக்கும் ஆசிரியர்களுக்கும் எமது நிறுவனம் பரிசில்களை வழங்கி அவர்களைத் தட்டிக் கொடுக்கின்றது.

எனவே கல்விக்காக நாம் வழங்குகின்ற ஊக்குவிப்பு உதவிகளையும் பரிசில்களையும் பாராட்டுக்களையும் நீங்கள் மிகக் கண்ணியமாக ஏற்றுக்கொண்டு அதனைக் கொண்டு முன்னேற்றமடைய வேண்டும்.'

இந்நிகழ்வில் ஏறாவூர் கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் அதிகாரி ஏ.எல். அப்துல் ஹபீல், சமூக சேவையாளரும் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரியுமான எம்.எஸ்.எம்.நஸீர், கலைமகள் வித்தியாலய ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .