2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தேர்தல் வேலைகளுக்காக அலுவலகம் திறப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 29 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


ஜனாதிபதித் தேர்தல் வேலைகளை கவனிப்பதற்கான மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் தாண்டவன்வெளியில் இன்று புதன்கிழமை (29)  திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் மாநகர முதல்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்ட அலுவலகச் செயலாளருமான சிவகீதா பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்புத்தொகுதி அமைப்பாளர் அருண் தம்பிமுத்து, கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ராஜன் மயில்வாகனம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் இணைப்பளர்களாக மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரிவுக்கு வி.சிவகுமாருக்கும் பட்டிருப்புத்தொகுதிக்கு ரி.பேரின்பராஜாவுக்கும்  கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரிவுக்கு எஸ்.பாஸ்கரனுக்கும்  நியமனக்கடிதங்களை அவரே வழங்கிவைத்தார்.

இங்கு உரையாற்றிய மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,


'இலங்கையில் 18 சதவீதமாக வாழ்கின்ற தமிழ் மக்களில்; எவரும் ஜனாதிபதியாக வரமுடியாது. அவ்வாறே, ஒரு முஸ்லிமினால் கூட ஜனாதிபதியாக  வரமுடியாது.  இந்த நிலையில்,  ஜனாதிபதித் தேர்தலில் வெல்லப் போகும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பதால்; கூடிய நன்மைகளை பெறலாம். 

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ஜனாதிபதியின் வெற்றிக்காக வேலை செய்வதற்கு எண்ணியும் நகரில் அரசியல் அனுபவமுள்ள காலஞ்;சென்ற இராஜன் சத்தியமூர்த்தியின் மகள் சிவகீதா பிரபாகரனையும் இணைத்து வேலைசெய்யும் நோக்கோடும் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த ஊவா மாகாணசபைத் தேர்தலில் அங்குள்ள தமிழர்கள் எல்லாம் சிந்தித்து வாக்களித்தால், ஒரு அமைச்சர் உட்பட 3 மாகாணசபை உறுப்பினர்களை அவர்கள் பெற்றுள்ளனர். இது எமக்கு ஒரு உதாரணமாகும். இதன்படி, செயல்பட்டு எமது எதிர்காலச் சிறுவர்களின் வளங்களை பெருக்க எமக்கு அரசியலில் விழிப்பு ஏற்படவேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனநாயக கட்சித் தலைவர் சரத் பொன்சேகாவை ஆதரித்து வாக்களிக்குமாறு கூறினர். அவர்களுக்கு மூளை இல்லையா? அவரே உங்கள் பிள்ளைகளை கொன்றுகுவித்தவர். அது ஏன் இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு தெரியவில்லை என்பதைச் சிந்தியுங்கள். கோமாளி அரசியல் நடத்த இடமளிக்கவேண்டாம்.

மட்டக்களப்பில் எவ்வளவோ அறிவாளிகள் உள்ளனர். நாடாளுமன்றம் சென்றுள்ளவர்களை பாருங்கள். அவர்களிடம் மொழியறிவு இல்லை. எவரிடம் எதைப் பேசுவது என்று தெரியாமல் உள்ளார்கள். நகரில் 40,000 தமிழர்கள் வாழ்கின்றனர். அவ்வளவு பேரும் ஜனாதிபதி மஹிதந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்தால், மட்டக்களப்பின் அபிவிருத்தி எப்படி இருக்கும் என எண்ணிப்பாருங்கள்.

எமது உரிமைகளை நாம் பாதுகாக்க வேண்டும். அதற்காக எதிர்க்கட்சியில் அமர்ந்துகொண்டு உரிமை, உரிமை என கோஷம் எழுப்புவதால் எந்த நன்மையும் இல்லை. ஆளும் தரப்பில் அமைச்சர்களாக இருந்து அபிவிருத்தியையும் உரிமையையும் பெற்றுக்கொள்ளமுடியும். எமது சகோதர முஸ்லிம் மக்களின் அரசியல் சாணக்கியத்தை பாருங்கள். இனியும் ஏமாறாமல் எமது மக்களின் எழுச்சியை பற்றிச் சிந்தியுங்கள்' என்றார்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .