2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கூடார வசதியின்மையால் செங்கற்கள் சேதமாகின்றன

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 18 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

கூடார வசதி இன்மையால் அறுத்துவைக்கப்படும் செங்கற்கள் மழைக் காலத்தில் கரையும் அதேவேளை, இந்த செங்கற்களை யானைகள் வந்தும் சேதப்படுத்துகின்றன. இதனால், தங்களின் தொழில் நடவடிக்கை பாதிக்கப்படுவதாக மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டிப் பிரதேசத்தில் பாரம்பரிய தொழிலாக செங்கல் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

சித்தாண்டிப் பிரதேசத்தில்;; சுமார் 50 குடும்பங்கள் செங்கல் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. சுமார் 200 பேர் இதில் தொழில் வாய்ப்புப் பெற்றுள்ளனர்.

செங்கல் உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களான களிமண், நீர், உமி ஆகியன சந்தணமடு சேரடி மற்றும் ஆத்து முகத்துவாரம் பிரதேசங்களில் கிடைக்கின்றன. இங்கு 50 கல்வாடிகள் உள்ளதாக செங்கலடிப் பிரதேச செயலகத்தின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்தார்.

ஒன்பது வருடங்களாக  கல்வாடியை நடத்தும் உரிமையாளர் ஒருவர் இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை தெரித்தபோது, 'வீட்டுத்திட்டங்களை மேற்கொள்ளும் நிர்மாணிப் பணியாளர்கள்; செங்கற்களுக்கு பதிலாக தரம் குறைந்த சீமெந்துக் கற்களை பயன்படுத்துவதாகவும் இதனால், செங்கற்களின் விற்பனை குறைவாக உள்ளது' என்றார்.

மேலும், கல்வாடி ஒன்றை அமைப்பதற்கு 50,000 ரூபாய் முதல் 75,000 ரூபாய் வரை செலவாகும் என்பதுடன், வருமானமாக ஒரு வருடத்துக்கு சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் கிடைக்கின்றது எனவும் அவர் கூறினார்.

வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள ஆண்களும் பெண்களும் கற்களை சுடுவதற்கான சூழைகளில் கற்களை அடுக்குவது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நாள் கூலி என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.

அண்மையில் பாம் அமைப்பினால் செங்கல் உற்பத்தி செய்வதற்கான கற்களை வெட்டும் அச்சுக்கள், வாளிகள், மண்வெட்டிகள் என்பன வழங்கப்பட்டன.

தற்போது செங்கல் ஒன்று 4.50 ரூபாய் படி மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.  
மேலும், செங்கற்களின் உற்பத்திக்கு தேவையான காய்ந்த விறகுகளை காட்டிலிருந்து கொண்டுவருவதுக்கு அரசாங்கம் அனுமதி கொடுத்தால் செங்கற்களின் உற்பத்திச் செலவு குறைவடையும் எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .