2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இரு கிராமங்களில் யானைகள் அட்டகாசம்

Editorial   / 2020 ஜூலை 31 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு கிராமங்களுக்குள் புகுந்த யானைகள், வீடுகள் தோட்டங்களைச் சேதப்படுத்தியுள்ளன என, மக்கள் கவலை தெரிவித்தனர்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புணாணை மேற்கு  கிராம அதிகாரிக்குட்பட்ட சாளம்பஞ்சேனை கிராமத்தினுள் நேற்று (30) இரவு புகுந்த யானைகள், வீடொன்றையும் தோட்டங்களையும் சேதப்படுத்தியுள்ளன

வீடு முழுதாகச் சேதமாக்கப்பட்டதுடன், உடமைகள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகின்றன. அத்தோடு, வீட்டுத் தோட்டங்கள் பயிரிடப்பட்ட கச்சான், கத்தரி, வெண்டி, மிளகாய் என்பவற்றை அழித்துத் துவம்சம் செய்துள்ளது.

தங்களது பகுதிகளுக்கு தொடர்ச்சியாக யானைகளின் அட்டகாசம் இடம்பெற்று வரும் நிலையிலும், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையும் பாதிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்தி, யானை வேலி அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பல தடவை சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்குத் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இடம்பெறவில்லை எனவும், இனியாவது இதில் கூடிய அக்கறை கொண்டு, தங்களது உயிரை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள முன்வருமாறு, மக்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

இதேவேளை, கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி கிராமத்தினுள் நேற்று இரவு புகுந்த யானையால் வீடொன்று சேதமாக்கப்பட்டதாக, பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.

“எல்லைப்புற கிராம மக்கள் காட்டு யானைகளின் தாக்கங்களால் தொடர்ந்தும் பாதிப்படைந்து வருகின்றனர். யானை வேலி அமைப்பது தொடர்பாக பல தடவை  அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் கே.யோகேஸ்வரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .