2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

’எமது இளைஞர்கள் இனியொருபோதும் ஆயுதமேந்த இடமளியோம்’

பேரின்பராஜா சபேஷ்   / 2018 ஜனவரி 07 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம், தனது அரசியல் அனுபவ முதிர்ச்சியின் அடிப்படையில், சர்வதேசத்துடனும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. எது எவ்வாறிருப்பினும், இனி ஒருகாலமும், எமது இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராட, நாங்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்' என்று, கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

 

'புலம்பெயர்ந்து மேலைத்தேய நாடுகளில் உள்ள ஒருசிலர், தங்களுக்கு நிரந்தரக் குடியுரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக, இங்குள்ளவர்களுக்கு பணம் வழங்கி, மீண்டுமொரு போராட்டத்தை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்' எனவும் அவர் குறிப்பிட்டார். 

'மேலைத்தேய நாடுகளிலிருந்து போராட்டத்தைத் தூண்டுவதற்கு முயற்சிப்பவர்கள், தங்கள் பிள்ளைகளை போராட்டத்துக்கு அனுப்ப முடியுமா? இனியொருபோதும் எங்கள் சமூகத்தை இந்த மண்ணிலே இழப்பதற்கு நாங்கள் தயாரில்லை. நாங்கள் கல்வி, பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டும்' என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு – மயிலம்பாவெளியில், நேற்று (06) மாலை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

'தமிழ் மக்களையும் மொழியையும், மதத்தையும் பாதுகாப்பதற்காக, நங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர், பதுளை வீதியில் பௌத்த சிலையொன்றை நிறுவ வந்தபோது, தேரருடன் சேரந்து எங்களைக் காட்டிக் கொடுத்தவர்கள், இந்தப் பகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

'வாகனேரியில் இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டன. அங்கு சென்று மக்களுடன் மக்களாக நின்று குரல்கொடுத்தவர்கள் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். அந்த நேரத்தில், அரசாங்கத்தின் கைக்கூலிகளாக இருந்தவர்கள், தற்போது எமது மக்களையும் மண்ணையும் காப்பாற்றப் போகிறார்களாம்.

'யுத்தம் மௌனிக்கப்பட்ட போது கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட இந்த மண்ணின் மீட்புக்காக போராடிய முன்னாள் போராளிகள், குடும்பத்துடன் சேர்ந்து வாழ முற்படும் போது, அவர்களை நிம்மதியாக வாழ விடாது காட்டிக்கொடுத்துக்கொண்டு இருந்தவர்கள், இன்று வாக்குக் கேட்டு நிற்பது வெட்கக்கேடாக உள்ளது' என, அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X