2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’கடன் செலுத்த முடியாமல் கிணற்றுக்குள் மறைந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் 'கடன் செலுத்த முடியாமல் கிணற்றுக்குள் மறைந்திருக்கும் பரிதாப நிலை வந்துவிடக் கூடாது' என்பதற்காக நுண்கடன் நிதி பற்றிய பல்வேறு விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் பரவலாக முன்னெடுக்கப்பட்ட வருவதாக இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர். ஸ்ரீபத்மநாதன் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நுண்கடன் நிதி வழங்கலின்போது ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் வழிகாட்டல் பற்றிக் குறிப்பிடும்போது, அவர் இதனைத் தெரிவித்தார்.

அது பற்றி இன்று (12) மேலும் குறிப்பிட்ட அவர்,

“இலங்கையில் 4ஆவது வறுமை மாவட்டமாக நிரல்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்காக பல்வேறு பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

“மக்கள் தனியார் கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெற்றுக் கொள்ளும் ஆவலின் காரணமாக அதற்குப் பின்னர் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் விடயத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இது வறுமை ஒழிப்பு எனும் நோக்கத்தைப் பெரிதும் பாதித்திருக்கின்றது.

“வீட்டிலுள்ள பெறுமதியான பொருட்களை விற்று அதிக வட்டிக்குப் பெற்றுக் கொண்ட நுண் கடன் நிதியைச் திரும்பச் செலுத்துவதும், கடன்களைச் செலுத்த முடியாத வேளையில் தலைமறைவாகி வாழ்வதும், கணவன் மனைவி குடும்பப் பிளவுகளும், பிள்ளைகளைப் பராமரிக்க முடியாத நிலையும், இறுதியில் தற்கொலை வரை சென்று விடுகின்றது.

“கடனை மீளப் பெறும் நிறுவன அலுவலர்கள் கடனாளியின் வீட்டுக்கு வந்து அமர்ந்து கொண்டதும் அவரை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக குடும்பப் பெண்ணொருவர் கிணற்றுக்குள் இறங்கி மறைந்து கொண்ட சம்பவம் சமீபத்தில் இடம்பெற்றிருக்கின்றது. இது ஒரு பரிதாபமான ஆனால், தவிர்த்திருக்கக் கூடிய நிலைமையாகும்.

“யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இப்படிப்பட்ட விரும்பத் தகாத சம்பவங்களை ஒழிப்பதற்கும் வறுமைப் பிடியிலிருந்து மீள்வதற்கும் மக்களை விழிப்படையச் செய்ய வேண்டியிருக்கின்றது.

“குறிப்பாக பாதிக்கப்பட்ட குடும்பங்களிலுள்ள இளைஞர், யுவதிகள் ஏதாவதொரு உற்பத்தித் துறையில் தமக்கான பயிற்சிகளைப் பெறவேண்டும்.

“சுயதொழில் உற்பத்தித் தொழில்துறையில் அவர்களது ஆர்வம் கூட்டாக முன்வைக்கப்படுமாயின் அவர்கள் தெரிவு செய்யும் தொழில் துறைகளுக்கான பயிற்சிகள் இலங்கை மத்திய வங்கியின் வறுமை ஒழிப்புப் பிரிவால் இலவசமாகவே வழங்க ஏற்பாடுகள் உள்ளன.

“இந்த அரிய வாய்ப்பை பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள இளைஞர் யுவதிகளும் உற்பத்தித் துறை சார்ந்தோரும் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

“உள்ளூர் மூலப்பொருட்களைக் கொண்டு எத்தனையோ வகையான உற்பத்திகளைத் தொடங்க முடியும்.

“உள்ளூரில் போதியளவு வளங்கள் இருந்தும் மட்டக்களப்பு மாவட்ட மக்களில் 80 சதவீதமானோர் வறுமைக்குட்பட்டவர்களாக அடையாளங்காணப்பட்டிருப்பதும் அந்த மாவட்டம் 4ஆவது வறுமை மாவட்டம் என்று பட்டியலுக்குள் நுழைந்திருப்பதையும் மாற்ற இளைஞர், யுவதிகள், சுயதொழில் முயற்சியாளர்கள், முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும்.

“தகைமையான சகல விவரங்களோடும் வங்கிகளை அணுகி, இலகு கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

“தொழிற்துறையைக் கூட்டாகவோ தனியாகவோ தொடங்க ஆர்வம் கொண்டுள்ள எவருக்கும் நிதி ஆதரவு வழங்க எந்த வங்கியும் மறுக்க மாட்டாது.

“அப்படி எந்த வங்கி அதிகாரியாவது மறுத்தால் அதுபற்றிய முறைப்பாட்டைச் சமர்ப்பிக்க வேண்டும்.

“ஆவலில் துரிதமாக, அதேவேளை அதிக வட்டிக்கு நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று பின்னர் அதனை மீளச் செலுத்த முடியாமல் அவஸ்தைப்படும் நிலைமை யுத்தத்திற்குப் பின்னரான மீண்டெழும் அபிவிருத்தி நோக்கிய மாற்றத்தைச் சீர் குலைத்து விடும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .