2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

காத்தான்குடி நகர சபை அதிகாரத்துக்குட்பட்ட பகுதி போதையற்ற வலயமாக பிரகடனம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி நகர சபை அதிகாரத்துக்குட்பட்ட பகுதியை, போதையற்ற வலயமாகப் பிரகடனம் செய்வதென, காத்தான்குடியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காத்தான்குடி நகர சபையால், அல்மனார் அல் ராசித் மண்டபத்தில் நேற்று (16) இரவு, போதைப்பொருள் பாவனைக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலிலேயே, இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், உலமாக்கள், அதிபர்கள், பள்ளிவாசல் சம்மேளனப் பிரதிநிதிகள், பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

காத்தான்குடி நகர சபை அதிகாரத்துக்குட்பட்ட பகுதியை, போதையற்ற வலயமாக உடனடியாகப் பிரகடனம் செய்தல், போதைப்பொருள் விற்பனையாளர்கள், பாவனையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உரிய ஆலோசனைகளையும் புனர்வாழ்வு ஏற்பாடுகளையும் செய்தல், போதைப் பாவனை இடம்பெறக்கூடிய இடங்களை அடையாளப்படுத்தி, அவற்றை முறையாகக் கண்காணித்தல் போன்ற விடயங்கள், இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டன.

அத்துடன், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் தலைமையில், முழு ஊரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்றை அமைத்தல், பள்ளிவாசல் பகுதிகள் அல்லது வட்டார ரீதியாக உப குழுக்களை அமைத்தல், மேற்படி குழுக்கள் அரச பாதுகாப்புத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளல் எனவும் இன்போது தீர்மானிக்கப்பட்டன.

அடுத்துவரும் மூன்று மாதகாலத்துக்கு போதைப்பொருள் பாவனையை, பிரதான பேசுபொருளாக மாற்றுவதுடன், ஜும்ஆ பிரசங்கங்கள், பாடசாலையில் இடம்பெறும் பெற்றோர் கூட்டங்கள், சமுர்த்திக் கூட்டங்கள் என்பவற்றில் இது தொடர்பாக மக்களை விழிப்பூட்டல் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

முழு ஊரையும் இணைத்ததாக, காத்தான்குடி நகர சபை தவிசாளர் தலைமையில், பாரிய போதை ஒழிப்பு மாநாடு ஒன்றை, காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்தில் ஏற்பாடு செய்து, அதில் கலந்துகொள்ளும் அனைவரும் போதைப்பொருட்களுக்கு எதிராகச் சத்தியப்பிரமாணம் செய்தல் என்ற தீர்மானமும் இதன்போது நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .