2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

குரங்குகள் தொல்லை; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்.ஜெயஸ்ரீராம்   / 2018 ஜூலை 11 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மீராவோடை, கிண்ணையடி, சுங்காங்கேணி ஆகிய பிரதேசங்களில், குரங்குகளின் தொல்லை அதிகமாகக் காணப்படுகிறது எனவும், அக்குரங்குகளைக் குறித்த பிரதேசங்களில் இருந்து அகற்றுமாறு கோரியும், பொதுமக்கள் இன்று (11) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமூகப் பற்றாளர் முனிதாஸ் சிறிகாந்தின் தலைமையில், குறித்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
முதலில் வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பின்னர் அங்கிருந்து கோறளைப்பற்று பிரதேச சபையை நோக்கி, கையில் பதாதையுடன் ஊர்வலமாக நடந்து சென்று, பிரதேச சபைக்கு முன்பாக அமர்ந்திருந்து, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

குரங்குத் தொல்லையில் இருந்து வீடு, உடைமைகள், பயிர்ச்செய்கை, தோட்டம் ஆகியவற்றைக் காப்பாற்றித் தாருங்கள் என, பொதுமக்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

தமது கோரிக்கை அடங்கிய மகஜரை, கோறளைப்பற்று பிரதேச சபைச் செயலாளர் அ.தினேஸ்குமாரிடம் கையளித்தபோது, மகஜரைப் பெற்றுக்கொண்ட செயலாளர், அடிக்கடி பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டோர்களால் முன்வைக்கப்பட்ட விடயமெனச் சுட்டிக்காட்டினார்.

இதற்கான தீர்வு, அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எட்டப்பட்டதாகும் என்றும், இருந்தபோதிலும் இது விடயமாக பிரதேசத்தின் வனஜீவராசிகள் திணைக்களத்தில் அதிகாரிகளின் கவனத்துக்குத் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாகவும், அவர் குறிப்பிட்டார்.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வி.வாசுதேவனிடம் மகஜர் கையளிக்கப்பட்ட போது, குறித்த விடயம் சம்பந்தப்பட்ட திணைக்களமே நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்ததுடன், வனஜீவராசிகள் திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X