2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’குற்றமற்ற என்னை நீதித்துறை வெள்ளை பேப்பரால் கழுவியுள்ளது’

Princiya Dixci   / 2021 ஜனவரி 13 , பி.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி, கனகராசா சரவணன்

“எனக்கும் ஜோசப் பரராஜசிங்கம் கொலைக்கும் எவ்விதமான சம்மந்தமும் இல்லையென அழகான வெள்ளைப் பேப்பரால் கழுவி  நீதித்துறை என்னை விடுதலை செய்திருக்கின்றது” என தமிழ் மக்கள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார். 

மட்டக்களப்பு, வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் காரியாலயத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதன்போது தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், “தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற அடிப்படையில் என்னுடைய வாழ்க்கையிலும் எமது கட்சிக்கும் நீதித்துறையினுடைய இன்றைய அறிவிப்பு வந்திருக்கின்றது. 2015-10-11 அன்று கொழும்பில் சிஐடியின் அலுவலகத்துக்குச் சென்ற போது, நல்லாட்சி அரசாங்கம் என்னை பழிவாங்க நினைக்கின்றது. யாருக்கோ பாவிக்க முடியாத சட்டத்தை அப்பாவியாக அரசியல் செய்து கொண்டிருக்கின்ற எனக்குப் பாவிக்க முனைகின்றது என ஊடகங்களுக்கு தெரிவித்தேன்.  

“கடந்த நல்லாட்சி அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பரிசாக, செய்யாத குற்றத்தை சோடிக்கப்பட்டு, அரசியல் ரீதியாக பழிவாங்கி, சிறையில் அடைத்தது. 1,869 நாட்கள், சிறைச்சாலையிலே வாடினேன். அடிக்கடி சிறைச்சாலையில் இருந்து வெளிவரும்போது, வரலாறு என்னை விடுதலை செய்யும் எனத் தெரிவித்தேன். எனக்கு நம்பிக்கையிருந்தது.

“இந்த வழக்கில் எனக்கு எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. ஜோசப் பரராஜசிங்கத்தை நான் கண்டதே இல்லை. அவருக்கு வாக்களித்ததும் இல்லை. அவர் அருகில் சென்று பார்த்ததும் இல்லை. அவருடன் அரசியல் ரீதியான எந்தவிரோதமும் எனக்கு இல்லை. அவர் மரணிக்கும் போது 2005ஆம் ஆண்டு அப்போது நான் அரசியலிலும் இருக்கவில்லை. 

“நான் நீதித்துறையை நம்பி பலமுறை வாதாடினேன். என்னைக் கைது செய்த காலத்தில் மாகாண சபை உறுப்பினராக இருந்தேன். மாகாண சபை உறுப்பினர் ஒருவரை சிறையில் அடைப்பது என்பது மக்களின் குரல்வளையை நசுக்குவதற்கு சமன். இதை நீதிபதி தீர்ப்பிலே எழுதியுள்ளார்.

“ஜோசப் பரராஜசிங்கம் என்ற அந்த மனிதர் நள்ளிரவில் ஆராதனையில் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் தலைப்பிட்டு, செய்திகள் வெளியிட்டன. இப்போது இருக்கின்ற ஆண்டகைதான் அப்போதும் இருந்திருப்பார். அவரோ அல்லது ஆராதனையில் ஈடுபட்ட எவரும் என்னைக் கண்டார்களா?  எந்தவிதமான கண்ட, தொழில்நுட்ப, சாட்சிகள் இல்லாமல் என்னை சிறையில் அடைத்தார்கள். நான் குற்றமற்றவன். எந்தவிதமான களங்கமற்றவன். 

“தற்போது எதிர்க்கட்சியினர், பிள்ளையான் ஒரு குற்றவாளி. ஜனாதிபதியின் அதிகாரத்தில் விடுவித்ததாக ஒரு மாயையைத் தோற்றுவிக்கின்றனர். இந்த வழக்கு தொடர்பாக நான்  ஜனாதிபதியையோ அல்லது பிரதமரையோ சந்தித்ததில்லை. இந்த வழக்கை கொண்டு நடத்தமுடியாது என எனக்குத் தெரியும். அதேபோல், என்னைக் கைதுசெய்த சிஐடிக்கும் அது தெரியும். 

“நான் சிறையில் இருந்து 54,000 விருப்பு வாக்குகளைப் பெற்றவன். வடக்கு, கிழக்கிலே எந்த தமிழரும் பெறாத வாக்குகளை மட்டக்களப்பு மக்கள் எனக்கு அளித்தார்கள். காரணம், இயல்பாகவே நான் மட்டக்களப்பில் பற்றுள்ளவன். இறுதிவரைக்கும் நிற்பேன் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கின்றது.

“அந்த நம்பிக்கையை நான் மக்களுக்காக செய்து காட்டுவேன். என்னுடைய உறுதித் தன்மையையும் மட்டக்களப்பு மீது நான் வைத்துள்ள பற்றையும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவை, மாகாண சபை முறமைதான் வேண்டும் என்கின்ற நிலைமையை நான் நடத்திகாட்டுவேன் என்று உறுதியாக இருக்கின்றேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X