2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’தமிழுக்காக நாம்; தமிழராய் நாம்’

வா.கிருஸ்ணா   / 2018 ஜூலை 08 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழியைப் பாதுகாப்பதனூடாக, தமிழர்களின் இருப்பையும் இன அடையாளத்தையும் பாதுகாக்கும் நோக்குடன், “தமிழுக்காக நாம்; தமிழராய் நாம்” என்னும் விசேட செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர், ஊடகங்களுக்கு இன்று (08) காலை கருத்துத் தெரிவிக்கும் போது, இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு, செங்கலடி பிரதேச செயலக மண்டபத்தில், நாளை (09) பிற்பகல் 3.00 மணியளவில் நடத்தப்படவுள்ளது எனத் தெரிவித்தார்.

"'ஓர் இனத்தை அழிக்க வேண்டுமென்றால், அந்த இனத்தின் மொழியை அழித்து விடுங்கள். இனம் தானாக அழிந்துவிடும்' என்று சொல்வார்கள். அந்த வகையில், 2009க்குப் பின்னர் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் ஒரு புறம் நடக்க, மறுபுறம் தமிழ் மொழியை அழிக்கின்ற செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

“கிழக்கைப் பொறுத்தமட்டில், தமிழன் என்று சொல்வதும் தமிழ் மொழியை முதன்மைப் படுத்துவதும், இனவாதமாகச் சித்திரிக்கப்படுகிறது. அதனை எமது தமிழர்கள் சிலரும், ஏனையவர்களுடன் இணைந்து செய்கிறார்கள். மாற்றுச் சமூகங்களைத் திருப்திப்படுத்த, தமிழன் என்ற அடையாளத்தையே கைவிடத் தயாராக இருக்கின்றார்கள்.

“எனவே, தமிழ் மொழியை முதன்மைப்படுத்தி, அதனை கிழக்கு மாகாணம் பூராவும் நடைமுறைப்படுத்தும் வகையில், 'தமிழுக்காக நாம்; தமிழராய் நாம்' என்ற வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிக்கவுள்ளோம்" என்று தெரிவித்தார்.

இவ்வேலைத்திட்டத்தை, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

“தமிழுக்காக நாம்; தமிழராய் நாம்” செயற்றிட்டத்தின் மூலமாக, பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது என, அவர் தெரிவித்தார்.
- பகுதி நேர தமிழ்ப் பள்ளிகளை நிறுவுதல்
- பொதுக் கட்டடங்களுக்கு தமிழ்ப் பெயர்களைச் சூட்டுதல்.
- வியாபார நிலைய விளம்பரப் பலகைகளில் தமிழ் மொழியை முதன்மைப்படுத்தல்.
- தமிழ்ப் பெரியார்களின் உருவச் சிலைகளை நிறுவுதல்.
- தினமும் பாடசாலைகளை தமிழ்மொழி வாழ்த்துடன் ஆரம்பித்தல்.
- தமிழர்களின் கலை, இலக்கிய, பண்பாட்டு அம்சங்களை அழிந்துவிடாமல் பாதுகாத்தல்
- கிழக்கில் அனைத்து அரச, தனியார் துறைகளில் அரசகரும மொழியான தமிழை முதன்மொழியாகப் பயன்படுத்தல்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .