2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘தமிழ் மக்கள், கடலில் வீழ்ந்து சாகும் நிலைமையே ஏற்படும்’

Editorial   / 2018 ஜூன் 13 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

“படுவான்கரை பிரதேசத்திலுள்ள எல்லைப்பகுதிகளில், திட்டமிட்ட வகையில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிப்படுவதால், இப்பிரதேசத்திலுள்ள 50 சதவீதமான தமிழ் மக்கள், கடலில் வீழ்ந்து சாகும் நிலைமையே ஏற்படும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் தெரிவித்ததாவது,

“புல்லுமலை பிரதேசத்தில் தண்ணீர் போத்தல் தொழிற்சாலை அமைக்கப்படுமாக இருந்தால் ஒரு நாளைக்கு 10,000 லீற்றர் வீதம் வாரத்துக்கு 70,000 லீற்றர் நிலத்தடி நீர் உறுஞ்சப்படும். அதற்கு மேலும் நீர் உறுஞ்சப்படலாம். அவ்வாறானால், அந்தப்பகுதி 3, 4 வருடங்களில் பாலைவனமாக மாறும்.

“இந்தப் பகுதி முற்று முழுதாக விவசாயப் பகுதியாகும். தனது வீட்டு நிலத்துக்கு யார் உரிமை கொண்டாடுவார்களோ என்ற அச்சத்துடன், தமிழ் மக்கள் இன்று வாழ்ந்து வருகின்றனர்.

“இந்த தண்ணீர் போத்தல் தொழிற்சாலை காரணமாக விவசாயம் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களும் பாதிக்கப்படுவார்கள். நிலத்தடி நீர் உறுஞ்சப்படுவதால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும்.

“ஏறாவூர்பற்று பிரதேச சபையானது ஒரு வருடத்தில் குறைந்தது 6 மாதங்களுக்கு மேலாக பிளாஸ்டிக் தாங்கி வைத்து நீர் வழங்கும் பகுதியாகக் காணப்படும் நிலையில், அந்த இடத்தில் தொழிற்சாலைக்கான கட்டடம் கட்டுவதற்கான அனுமதியை, பிரதேச சபையின் செயலாளர் வழங்கியுள்ளார்.

“படுவான்கரைப் பகுதியிலுள்ள பெருவட்டை எனும் குளம் தனி நபர் ஒருவரால் அமைக்கப்பட்டுள்ளது. அது கமநல திணைக்களத்திற்குரிய குளமாகும்.

“அரசாங்க அதிபருக்கும் பிரதேச செயலாளருக்கும் எந்தவித அறிவித்தலும் வழங்காமல் வன இலாகா தங்களுக்குரிய இடமாக கற்களை நட்டு, அப்பகுதிகளை அடையாளப்படுத்துகின்றனர்.

“இச்செயற்பாட்டை அவர்கள் தொடர்ந்து செய்வார்களானால் படுவான்கரையிலுள்ள 50 சதவீதமான மக்கள் கடலில் வீழ்ந்து சாகும் நிலைமையே ஏற்படும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .