2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

’தீர்வுக்கான போராட்டம் நிறைவடையவில்லை’

வ.துசாந்தன்   / 2017 ஜூலை 17 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தமிழர்களின் ஆயுதப்போராட்டம் நிறைவு பெற்றிருக்கின்றதே தவிர, தீர்வுக்கானப் போராட்டம் இன்னும் நிறைவுபெறவில்லை' என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குறிப்பிட்டார்.

'தீர்வுக்கான போராட்டத்துடன், தமிழர்களின் ஐந்தாம் கட்டப் போராட்டமாக, கல்விக்கானப் போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. கல்வியின் ஊடாகவே, நாம் பலவற்றைச் சாதிக்க முடியும். அதற்காக, நாம் அனைவரும் ஒன்றுசேரவேண்டும்' என்றும் அவர் கூறினார்.

கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்துரைக்கையில் மேலும் கூறியதாவது,

'கிழக்கு மாகாண சபையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துள்ளதாக, பேஸ்புக்கிலும் சமூக வலைத்தளங்களிலும் எழுதி வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய இரண்டும் இணைந்து, மாகாணத்தில் ஆட்சி அமைக்கவில்லை. நான்கு கட்சிகள் சேர்ந்தே ஆட்சி அமைத்திருக்கின்றன. கிழக்கு மாகாணத்தில 40 சதவீதமான தமிழர்கள் வாழ்கின்ற போதிலும், எல்லோரும் தேர்தலில் வாக்களிப்பதில்லை. இதனால் தான், இரண்டு ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடந்த தேர்தலில் இழக்க நேரிட்டது.

'அபிவிருத்தி செய்ய வேண்டும், இனத்தைப் பாதுகாக்க வேண்டும் எனக் கூறிவருகின்றனர். இனத்தைப் பாதுகாப்பதாக இருந்தால், இனம் அதிகரிக்க வேண்டும். இவற்றை, அரசியல்வாதிகளால் செய்ய முடியாது. தமிழினத்தின் அதிகரிப்பு குறைந்துகொண்டே செல்கின்றது. அவ்வாறு தொடர்ந்தால், நிலத்தையும் பாதுகாக்க முடியாத நிலைதான் ஏற்படும். அதேவேளை, அதிகரிக்கின்ற இனத்துக்கு இடத்தேவை ஏற்படும். இதனால், எமது நிலங்கள் பறிபோகும். இதனை உணர்ந்து இனத்தை அதிகரிக்க முயலவேண்டும்.

'எல்லோரும், அரசியல்வாதிகளை மட்டும் குறைகூறிக்கொண்டு இருக்கமுடியாது. நாமும் எமது இனத்துக்காக, பிரதேசத்துக்காக என்ன செய்திருக்கிறோம், என்ன செய்கின்றோம் என்பதை அறிந்து, எம்மில் நாமே மாற்றத்தை ஏற்படுத்தி, நாமும் இனத்துக்காக, பிரதேசத்துக்கான சேவைகளைச் செய்யவேண்டும்' என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X