2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘த.தே.கூ.விலிருந்து யாரையும் பிரிந்துசெல்வதற்கு அனுமதிக்கக் கூடாது’

வா.கிருஸ்ணா   / 2018 ஜனவரி 09 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்காகவும் தமிழர்களின் பலத்தை அதிகரிப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து யாரும் பிரிந்து செல்வதற்கு, தமிழ் மக்கள் அனுமதிக்ககூடாது” என, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். 

மட்டக்களப்பு, ஊறணி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார். 

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், மேலும் தெரிவித்ததாவது, 

“தேசிய மட்டப் பிரச்சினைகளாக இருந்தாலும், ஒரு நகரத்தின் வட்டாரங்களுடைய அபிவிருத்தியாக இருந்தாலும், எமது மக்களுக்கு உள்ள தேவைகளைச் சுட்டிக்காட்ட நாங்கள் கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம்.  

“எங்களுடைய மக்கள், தேசியத்துக்காக தங்களுடைய உயிர்களைத் தியாகம் செய்தவர்கள் என்ற ரீதியில், எந்தத் தேர்தலாக இருந்தாலும், அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இருக்கின்றனர் என்பதை, தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்குக் காட்டவேண்டியவர்களாக இருக்கின்றோம். 

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது, சாதாரணமாக நான்கு கட்சிகளின் தலைவர்கள் கூடிக் கலந்துரையாடி உருவாக்கப்பட்டதல்ல. தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரனின்  வழிநடத்தலில் உருவாக்கப்பட்டதாகும்.  

“அவருடைய காலகட்டத்தில், இந்த நாட்டினுடைய போராளிகள், தமிழ் மக்களுக்கு உந்துசக்தியாக இருந்து, நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கப் பழக்கப்படுத்தினார்களோ அவ்வாறுதான் இன்றும் தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து வருகின்றார்கள்.  

“ஒரு நகரத்தின் அபிவிருத்தியென்பது அந்ததந்த உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாகவே கட்டியெழுப்ப முடியும். அவ்வாறு கிராமங்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கக்கூடிய சிறந்த வேட்பாளர்களையே, த.தே.கூ. நிறுத்தியுள்ளது.  

“சில உள்ளூராட்சி மன்றங்களில், கிராமங்களைப் பிரித்தாள நினைக்கும் வகையில் குறுக்கு வழியில் வாக்குகளைப்பெறுவதற்காக, பெரும்பான்மை கட்சிகள் மேற்கொள்ளும் பிரசாரத்தை மக்களே புறக்கணியுங்கள். 

“த.தே.கூ., தேசியம் கதைப்பதற்கே சரியானவர்கள்; அபிவிருத்திகள் செய்யமாட்டார்கள் எனச் சிலர் கூறிவருகின்றனர். நாங்கள் மாகாண மற்றும் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்கள் ஊடாகப் பல அபிவிருத்திகளைச் செய்துள்ளோம். அதனை மக்கள் நன்கு அறிவார்கள்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .