2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புல்லுமலை விவகாரம்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 ஜூன் 14 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, புல்லுமலை, கும்புறுவெளி மக்களின் அடிப்படை உரிமை மீறப்படுகிறது எனத் தெரிவித்து, அது தொடர்பான முறைப்பாடு, மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களுள் ஒருவரான அம்பிகா சற்குணநாதனிடம், அவரது மட்டக்களப்பு அலுவலகத்தில் வைத்து, கிழக்கு சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பால் இன்று (14) கையளிக்கப்பட்டது.

கிழக்குச் சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் ஏம்.முத்துலிங்கம், செயலாளர் க.நாகேந்திரன் ஆகியோர் கையெழுத்திட்டு, இந்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்துள்ளனர். இதன்போது இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட திட்ட இணைப்பாளர் த.சிறிபாலுவும் இணைந்திருந்தார்.

அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“புல்லுமலை, கும்புறுவெளி பிரதேசத்தில் பல ஏக்கர் காணிகளில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் பாரியளவிலான தொழிற்சாலையொன்றை, ரொமேன்சியா லங்கா பிறேவெற் லிமிட்டெட் தனியார் கம்பனி ஆரம்பிக்கவுள்ளது.
“இதனை கடந்த 10ஆம் திகதி, அக்கம்பனியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை உறுதிப்படுத்துகின்றது.

“புல்லுமலை பகுதி, கடந்த கால யுத்த அனர்த்தத்தால் முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்ட கிராமமாகும். இக்கிராமத்தில் காலாகாலமாகக் குடிநீர்த் தட்டுப்பாடு இருந்து வருவதுடன், மழை நீரை நம்பியும் அங்குள்ள குளங்களையும் நம்பியே, மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேற்கொள்கின்றார்கள்.

“மேற்படி நீர்ப்பற்றாக்குறை காணப்படும் உரிய பகுதிகளில் 180 - 200 மீற்றர் ஆழம் வரையான குழாய்க் கிணறு அடித்து, நிலக்கீழ் நீர், குளங்கள் மற்றும் உன்னிச்சை நீர்பாசனத் திட்டம் ஆகியவற்றில் நீரைப் பெற்று, அதனை போத்தலில் அடைத்து விற்பதற்கான தொழிற்சாலையாகவே இது அமையவிருக்கின்றது.

“இத்தொழிற்சாலை அமைப்பதற்காக 22க்கும் மேற்பட்ட அரச, அரச சார்பற்ற திணைக்களங்கள், நிறுவனங்களின் பகுப்பாய்வுகளின் அடிப்படையில் அரச கட்டமைப்புத் திணைக்களங்கள், அதிகாரசபைகளிடம் அனுமதிபெற்று, இத்தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருவதாக, அந்நிறுவனத்தின் ஊடக அறிக்கை குறிப்பிடுகின்றது.

“ஆனால், மேற்படி 22 மேற்பட்ட ஆய்வுகளும் நடைபெற்ற போதும், உரிய பிரதேச மக்களுக்கு இவை தெளிவுபடுத்தப்படவில்லை. மக்களிடம் ஆலோசனைகளும் கேட்கப்படவும் இல்லை. அதேவேளை, உரிய பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இவ்விடயம் தொடர்பாக பேசப்படவும் இல்லை, தொழிற்சாலை அமைப்பதற்கான அனுமதிகளும் வழங்கப்படவும் இல்லை.

“இருந்தபோதும், திட்டமிட்ட வகையில் அரச திணைக்களங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, மேற்படி நிறுவனம், அனுமதிகளைப் பெற்றிருக்கின்றது. இது முற்றிலும் மனித உரிமை மீறலாகும்.

“மேற்படி தொழில்சாலை அமையப் பெறுமாகவிருந்தால், கிராம மக்கள் மாத்திரம் இன்றி, மட்டக்களப்பு மாவட்டமே கீழ் குறிப்பிடப்படும் பாதிப்புக்குட்படும் என்பதை அறியத்தருகின்றோம்
1. விவசாயம் முற்றாகப் பாதிக்கப்படும்.
2. மீன்பிடிகள், பயிர்கள், மிருகங்கள், காடுகள் அழிவடையும் என்பதால், மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, மேலும் வறுமைக்குட்படுவார்கள்.
3. புதிய வகையான நோய்கள் ஏற்படுவதுடன், இறப்புகளும் அதிகரிக்கும்.
4. குளங்கள், கிணறுகளில் நீர் வற்றிப் போவதுடன், குடிநீர்த் தட்டுபாடு மேலும் அதிகரிக்கும்.
5. பெண்கள், சிறுவர்கள், முதியோர் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள்.

“ஆகவே, இத்தொழிற்சாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கிய திணைக்களங்கள், அதிகாரசபைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை, இலங்கை மனித உரிமை ஆணைக்குழு எடுக்க வேண்டும்.

“அதேவேளை, தொழிற்சாலை அமைப்பதை உடன் நிறுத்தி, மக்களின் உயிர் வாழும் உரிமையை உறுதிப்படுத்தவும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .