2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பெண்களை மேம்படுத்தும் செயற்றிட்டம் அங்குரார்ப்பணம்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 ஜூலை 05 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு, வட மத்திய மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் அச்சமூகத்தில் வறுமை நிலையில் வாழ்பவர்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கான பங்களிப்பை மேற்கொள்ளும் செயற்றிட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, மட்டக்களப்பு - ஈஸ்ற் லகூன் சுற்றுலா விடுதியில் இன்று (05) காலை நடைபெற்றது.

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பெண்களை கூட்டுறவின் ஊடாக மேம்படுத்தும் வகையில்  அமையவுள்ள இச்செயற்றிட்டம், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் சுவீடன் நாட்டின் வீ. எப்பக்ற் நிறுவனத்தின் ஊடாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் காவியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தாலும், அனுராதபுர மாவட்டத்தில் ரஜரட்ட பிரஜா நிலையத்தாலும் முன்னெடுக்கப்படவுள்ளது.

காவியா நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி திருமதி யோகமலர் அஜித்குமாரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான அங்குரார்ப்பண நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, வீ. எப்பகற் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் சுபாசி திசாநாயக்க, திட்ட இணைப்பாளர் பிரியந்த ஜயக்கொடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் 2018 தொடக்கம் 2021 வரையான 4 ஆண்டு காலப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தின் ஊடாக 26 கிராமங்களிலுள்ள 2,953 பயனாளிகள் பயன்பெறவுள்ளனர்.

அத்தோடு, 12 மீனவ மற்றும் விவசாய கூட்டுறவுச் சங்கங்களும் இந்த இடையீட்டில் ஈடுபடுத்தப்படுவர்.

பால்நிலை சமத்துவத்தைஉறுதிப்படுத்தும் முகமாக அங்கத்தவர்கள், தொழில் உரிமையாளர்களாகவும் தலைவர்களாகவும் மாறுவதற்கு ஏதுவாக சந்தைத் தொடர்புகள், நிதி பெறுதல், விவசாயத் திறமைகளை வளர்த்தல் போன்ற விடயங்களில் இச்செயற்றிட்டத்தின் ஊடாகப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .