2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'துருனு சிரம சக்தி' இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் 1,500 ஆக அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2016 மே 23 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், வடிவேல் சக்திவேல், எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ். பாக்கியநாதன்

கடந்த வருடம் நாடளாவிய ரீதியில்  668ஆக முன்னெடுக்கப்பட்ட 'துருனு சிரம சக்தி' இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்,  இந்த வருடத்தில் 1,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மேற்கொண்டுவரும் இளைஞர் அபிவிருத்தி மற்றும் சமூக அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு, அம்மன்றத்தின் மட்டக்களப்புக் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் மே மாதம்வரை முன்னெடுக்கப்பட்ட தேசிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், இளைஞர் சமூக அபிவிருத்திச் செயற்பாடுகள் பற்றியும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் இந்த வருடத்தில் நிறைவேற்றப்படவுள்ள வேலைத்திட்டங்கள் பற்றியும் இங்கு தெளிவூட்டப்பட்டன.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'துருனு சிரம சக்தி எனும் பெயரில் இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டன. ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் இரண்டு வேலைத்திட்டங்கள் என்ற அடிப்படையில் 28 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன் ஒவ்வொரு வேலைத்திட்டமும் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதி உடையதாகும். இதன் கீழ் வீதிகள், பொதுநோக்கு ஒன்றுகூடல் மண்டபங்கள், வாசிகசாலைகள், பாலர் பாடசாலைகள் ஆகியவற்றுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த  வேலைத்திட்டங்கள்; பூர்த்தி செய்யப்பட்டு இந்த வருட ஆரம்பத்தில் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன' என்றார்.  

'இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் மத்தியில் செயலூக்கம் கொண்டவர்களாக மாற்றுவதே 'துருனு சிரம சக்தி' எனும் இளைஞர்  அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். இது வெற்றி அளித்துள்ளது.  இதற்கான வேலைத்திட்டங்கள் இந்த வருடத்தில் 1,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு இளைஞர், யுவதிகளின் செயலூக்கத்தை அதிகரிக்க உதவும்.

மேலும், இந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 348 கிராம அலுவலகர் பிரிவுகளிலும் எமக்கு வழங்கப்பட்ட இலக்கைத் தாண்டி 369 இளைஞர் கழகங்களை உருவாக்கி, அதில் சுமார் 16 ஆயிரம் இளைஞர், யுவதிகளை அங்கத்தவர்களாக இணைத்துள்ளோம். பிரதேச இளைஞர் கழகங்களில் விசேட தேவையுடையோர் விசேட கரிசனையில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.

அத்துடன், பிரதேச இளைஞர் கழகங்கள், பிரதேச இளைஞர் சம்மேளனம், மாவட்ட இளைஞர் சம்மேளனம் என்பன இந்த வருடத்தின்; பெப்ரவரி மற்றும் மார்ச் காலப்பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 27 வருடங்களுக்குப் பின்னர் வெற்றிகரமாக 5,000 பேர் கலந்துகொண்ட 'யொவுன்புர' நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 150 பேர் பங்குபற்றியிருந்தனர்' எனவும் அவர் மேலும் கூறினார்.

'சமீப சில நாட்களில் நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் எமது மாவட்ட தேசிய இளைஞர் கழக சம்மேளனம் மேற்கொண்ட நிவாரண சேகரிப்பின் மூலம் 150,000 ரூபாய் பணமும் 150,000 ரூபாய் பெறுமதியான அத்தியாவசியப் பொருட்களும் கிடைத்துள்ளன.  சேகரிக்கப்பட்ட பணம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும்.

மேலும், எதிர்வரும் காலங்களில் 'நாட்டின் அபி;விருத்தியில் இளைஞர்களின் பங்களிப்பு' எனும் தொனிப்பொருளில் இளைஞர் தினம், இளைஞர் கொடிதினம், 'றியலிற்றி ஷோ' இளைஞர் பரிசளிப்புப் போட்டிகள் என்பனவும் இடம்பெறவுள்ளன' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .