2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

படுவான்கரைக்கான நிவாரணப் பணிகள் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 14 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால்  கடுமையாக பாதிக்கப்பட்ட  பகுதிகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நடவடிக்கைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


அந்த வகையில் நேற்று வியாழக்கிழமை    படுவான்கரைப் பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருள்களை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வழங்கினார். உலர் உணவுப் பொருள்கள் படகு மூலம் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டன.

இந்நிலையில், பட்டிருப்பிலிருந்து களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் இயந்திரப்படகில் படுவான்கரைக்கு சென்ற மீள்குடியேற்ற பிரதியமைச்சர், அங்குள்ள நிலைமைகளையும் பார்வையிட்டார். அத்துடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள பழுகாமத்திலுள்ள நலன்புரி நிலையங்களுக்கு சென்று அங்குள்ள மக்களின் குறைநிறைகளையும் பிரதியமைச்சர் கேட்டறிந்துகொண்டார்.

அப்பகுதியில் கடமையாற்றும் அதிகாரிகளுடனும் பிரதியமைச்சர் கலந்துரையாடியதுடன்,  அங்கு தற்போதைய சுகாதார வசதிகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார். படுவான்கரைக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் அப்பகுதிக்கு போக்குவரத்து மேற்கொள்ள இயந்திரப்படகொன்றையும் உடனடியாக பெற்றுக்கொடுத்தார்.

இதேவேளை,  களுவாஞ்சிக்குடி பிரதேசத்தின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியான மகிழூர்முனைக்கும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விஜயம்செய்து அங்குள்ள நிலைமைகளையும் பார்வையிட்டார். இதனையடுத்து, மக்களை சென்று பார்வையிட்டதுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார். அத்துடன் மருந்துகள் பெற்றுக்கொள்வதற்காக  வெளியில் செல்லமுடியாத நிலையேற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் தொடர்புகொண்டு உடனடி வைத்தியக்குழுவையும் அப்பகுதிக்கு வரவழைத்தார்.

மேலும் எருவில் மற்றும் குறுமன்வெளி கிராம மக்களை சென்று சந்தித்து அவர்களின் தேவைப்பாடுகள் குறித்தும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர்  கேட்டறிந்தார்.

இந்த விஜயத்தின்போது மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் எஸ்.அருள்ராஜா, களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு ஆகியோரும் உடன் சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X