2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மேய்ச்சல் நிலங்களில் விவசாயம் செய்வேரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குறுமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் எல்லை பிரதேசங்களான வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமங்களில் எல்லைகளில் மேய்ச்சல் நிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களில் அத்துமீறி விவசாயச் செய்கையில் ஈடுபடுபவர்களை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற உன்னிச்சை நீர்ப்பாசன விவசாய செய்கை ஆரம்பக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா துரைரெட்ணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உட்பட அரசாங்க அதிகாரிகளும், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப்புற எல்லையில் கால்நடைகளுக்குரிய மேச்சல் தரையில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவரால் அத்துமீறி விவசாயம் செய்யப்படுவதுடன் அங்கு வேலிகளும் அமைக்கப்படுவதாக குறித்த கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா இது தொடர்பாக பிரஸ்தாபிக்கையில், இவ்விடயம் மிகவும் அபாயகரமாதென்றும் இதை ஆரம்பத்திலே தடுக்க வேண்டும் என்றும் இதற்காக அரசாங்க அதிபர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பதிலளித்த அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

அதேநேரம் இவ்விடயம் குறித்து கருத்துக் கூறிய பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், இவ்விடயத்தை உடனடியாக ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்து தீர்த்து வைப்பதற்கு ஒரு வார காலம் அவகாசம் தருமாறும் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்தார்.

 இதற்கு முன்னோடியாக தானும் அரசாங்க அதிபரும் பிரதேச செயலாளரும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து இதுபற்றி அவரது கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X