2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கதிர் வீச்சியலுக்கான சர்வதேச தினமும் வைத்திய விம்பங்களுக்கான அதன் தொடர்பும்

A.P.Mathan   / 2012 நவம்பர் 08 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

2012ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் நாளானது முதற் தடவையாக சர்வதேச கதிர் வீச்சியல் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இத் தினமானது வில்ஹெம் ரொன்ஜன் (Wilhelm Conrad Rontgen) அவர்களால் X-கதிர் கண்டுபிடிக்கப்பட்ட 117ஆவது ஆண்டு நினைவு நாளாகும்.

வில்ஹெம் கொன்ராட் ரொன்ஜன் ஜேர்மனியைச் சேர்ந்த ஒரு பௌதீகவியலாளர். இவர் 1875ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் நாள் ஒரு குறித்த அலை நீள வீச்சினை உடைய மின்காந்தக் கதிர்களை உருவாக்கி கண்டறிந்தார். அதுவே X-கதிர்கள் எனத் தற்பொழுது அறியப்படுகிறது. இதன் பெறுபேறாக அவருக்கு 1901ஆம் ஆண்டு முதற்தடவையாக பௌதீகவியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ரொன்ஜன் 1845ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் நாள் ஜேர்மனினின் லெனெப் என்னும் இடத்தில் புடவை வியாபாரி ஒருவருக்கு ஒரேயொரு மகனாகப் பிறந்தார். 1895ஆம் ஆண்டளவில் ரொன்ஜன் வெவ்வேறு வகை வெற்றிடக்குழாய்ப் பரிசோதனை உபகரணங்களினூடு மின்னிறங்கம் செய்யும் போது ஏற்படும் வெளிப்புறத் தாக்கங்களை ஆராய்ந்தார். மீண்டும் மீண்டும் செய்த பரிசோதனைகளின் இறுதியில் 1875ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் நாள் ரொன்ஜன் ஒரு புதிய வகை கதிரைக் கண்டுபிடித்து,  அதற்கு X-கதிர் எனப் பெயரிட்டார். இரண்டு வாரங்களின் பின், அவர் தனது மனைவி அன்னா பேர்தா (Anna Bertha)வின் கைகளை X-கதிர்களைப் பயன்படுத்தி முதற்தடவையாகப் படம் எடுத்தார்.

ரொன்ஜன் தனது 77ஆவது வயதில் 1923ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் நாள் இறந்தார். அவர் தனது கண்டுபிடிப்புக்களைப் பிரயோகிப்பதற்கான உரிமத்தைப் பெற்றிருக்கவில்லை. அத்தோடு தனது நோபல் பரிசுமூலம் பெற்ற பணத்தையும் வூஸ்பேக் பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்.

பல்வேறு நோய்களைக் கண்டறியும் கதிர்வீச்சியலின் தந்தையாக இன்று ரொன்ஜன் கருதப்படுகின்றார். X-கதிர்களைப் பயன்படுத்தும் வைத்திய நிபுணத்துவம் கதிர்வீச்சியல் என அழைக்கப்படுகிறது. அதேவேளை விசேடமாக நோய் கண்டறியும் முறைகளில் கதிர்வீசல் அற்ற வேறுசில காந்த மின் அலைகளும் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே இந்த நிபுணத்துவமானது மிகப் பொருத்தமாக 'வைத்திய விம்பங்கள்' என அழைக்கப்படுகின்றது.

வைத்தியர்கள் நோயின் அறிகுறிகள் குணாம்சங்களைக் கொண்டு நோயினையும் நோயாளியின் நிலைமையையும் கணித்தல் 'வைத்தியக் கண்டறிதல்' எனப்படும். நோயினை கண்டறிவதற்கு உடலின் உட்பாகங்களை விம்பங்களின் ஊடாக அறியும் தொழில்நுட்பமானது விம்பங்களினூடான வைத்தியக் கண்டறிதல் ஆகும். நோயின் அறிகுறிகள் எப்போதும் வெளி உடம்பில் மட்டும் காணக்கூடியதாக அமையாததால் உடம்பின் உட்பகுதியில் உள்ள அசாதாரண நிலைமையைக் கண்டறிய விம்பங்கள் உதவுகின்றன.

தற்பொழுது மனித உடலின் கட்டமைப்புக்களையும் அதன் தொழிற்பாடுகளையும் ஒளிப்பதிவாக்கிப் பெறப்படும் வைத்திய விம்பங்கள் நோயினை அடையாளம் காண்பதற்கும் அதற்கான உரிய வைத்தியங்களைச் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. கதிர்வீச்சியல் நிபுணர்கள் பல்வேறு வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட விம்பமாக்கல் தொழில்நுட்பங்களான X -ray Radiography, Ultrasound Scan, CT Scan, MRI Scan, Nuclear Medicine, PET Scan போன்றவற்றை நோய்களை இனங் காணவும் அதற்கு வைத்தியம் செய்யவும் பயன்படுத்துகின்றனர்.

Ultrasound Scanஇல் அதிகூடிய உச்ச மீடிறனை உடைய ஒலி அலைகளும், MRI இல் காந்தப் புலமும் விம்பத்தை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவை அயனாக்கல் கதிர்வீச்சற்ற  தொழில்நுட்பங்களாகும். X-கதிர் பரிசோதனைகள் CT.Scan, Nuclear Medicine போன்றவற்றில் அயனாக்கல் கதிர்வீச்சு பிரயோகிக்கப்படுகின்றது. அயனாக்கல் கதிர்வீச்சு சிலவேளைகளில் புற்று நோய் தாக்கத்திற்கான ஒரு காரணியாக அமையலாம்.

கதிர்வீச்சுப் பாதுகாப்புக்கான சர்வதேச ஆணையம் (ICRP) ஆனது ஒரு சுதந்திரமான சர்வதேச நிறுவனமாகும். இது கதிர்வீச்சுப் பாதுகாப்புக்கான உத்தரவாதப்படுத்தல்களையும், வழிநடத்தல்களையும் மேற்கொள்கிறது. இவ்வாறான உத்தரவாதப்படுத்தல்கள் புற்றுநோய் மற்றும் வேறு நோய்களையும் தடுப்பதற்கு உதவுகின்றன. அத்தோடு கதிர்வீசல் உருவாக்கத்தின் போது ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்கும், சூழலைப் பாதுகாப்பதற்கும் உதவுகின்றன.

இலங்கையில் அணு சக்தி அதிகார சபையானது, சட்டதிட்டங்களுக்கு அமைய ஒழுங்குபடுத்தப்பட்டு, வலு மற்றும் மின்சக்தி அமைச்சின் கீழ் தொழிற்படுகின்றது. இவ்வமைப்பானது கதிர்வீசல் பயன்பாட்டின் போது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தகுந்த பாதுகாப்பு முறைகளையும் உத்தரவாதப்படுத்தல்களையும் எமது நாட்டில் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தப்படுகின்றது.

ரொன்ஜனின் X-கதிர் கண்டுபிடிப்பானது மனித குலத்திற்குக் கிடைத்த ஓர் அளப்பரிய வரப்பிரசாதமாகும். கடந்த 117 வருடங்களாக நோயைக் கண்டுபிடிக்கவும் அதனைக் கையாளவும் இந்த நிபுணத்துவம் பல்வேறு வகையில் முன்னேற்றம் அடைந்து பிரயோகிக்கப்பட்டுள்ளது. கதிர்வீச்சலை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தி மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு வழிசமைப்போம்.

டொக்டர் ஷாந்தினி ரொசைரோ,
Consultant Radiologist
பேராதனை போதனா வைத்தியசாலை


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X