2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'அங்கத்தவர் தொகை அதிகரிக்கப்பட வேண்டும்'

Kogilavani   / 2016 ஜூலை 24 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

'ஐக்கிய தேசியக் கட்சியின் ஒவ்வொரு கிளையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் 10 சதவீத அங்கத்தவர்களை அதிகரித்துக்கொள்ள வேண்டும்' என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் கோரியுள்ளார்.

'70 வருட வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு இது முடியாத காரியமல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேசமட்ட அமைப்பாளர்களது கூட்டம், கண்டி குயின்ஸ் ஹோட்டலில் சனிக்கிழமை (23) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,

'கடந்த ஆட்சியிலிருந்த பிரதம அமைச்சினால் எதனையும் சாதிக்க முடியவில்லை. ஆனால், தற்போதைய பிரதம அமைச்சு பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்து இன்னும் ஒருவருடம்கூட பூர்த்தியாகவில்லை. ஆனால், இடைப்பட்ட இக்காலத்தில் நாம் நாடாளுமன்றத்துக்கு அதிகாரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். ஜனாதிபதி அதிகார முறையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம்;, சுயாதீனமான ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுவிட்டன. தகவலறிவதற்கான சட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். 11 மாதங்களில் இவ்வளவு தூரம் செல்ல முடிந்துள்ளது.  இவ்வாறான  பல மாற்றங்களை ஏற்படுத்தி வரும் எம்மைப் பார்த்து, கூட்டு எதிர்க்கட்சியினர் மீண்டும் அதிகாரிங்களை கேட்கின்றனர்.  அதனை விட்டுக்கொடுக்க நாங்கள் தயாரில்லை' என்றார்.

'முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் வகிக்காத பதவி எது என கேட்கவிளைகிறேன். நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, பிரதமராக, ஜனாதிபதியாக அவர் பல பதவிகளை வகித்துவிட்டார். அவரது ஆட்சிக் காலத்தில் சகல அதிகாரங்களையும் வைத்துகொண்டு செய்யாத செயற்றிட்டங்களையா அவர் மீண்டும் செய்யப்போகிறார்?' என அமைச்சர் கபீர் ஹாசிம் கேள்வி எழுப்பியுள்ளார்.

'எமக்கு நாடாளுமன்ற பலம் மட்டுமே இன்று உண்டு. எமக்கு மாகாண சபைகளின் பலத்தையும் உள்ளூராட்சி அமைப்புக்களின் பலத்தையும் தாருங்கள். அதன் பின் எமது பணி இன்னும் சிறக்கும்' எனவும் அவர் கோரினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .