2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்று நல்லாட்சி காணாமல் போய்விட்டது

Sudharshini   / 2015 நவம்பர் 16 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா  

'நல்லாட்சி என்ற போர்வையில், நாட்டு மக்கள் படு மோஷமாக ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். நல்லாட்சி இன்று காணாமல் போயுள்ளது. நல்லாட்சிக்கு குரல் கொடுத்தவர்கள் அனைவருமே, எதை எதையோ பேசி, செயற்பட்டுக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது என்று போக்குவரத்து அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வா தெரிவித்தார்.

பண்டாரவளை, கரந்தகொல்லையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'நல்லாட்சிக்கு வித்திட்டவர்கள், ஊழல், மோசடிகள் குறித்து கவர்ச்சிகரமாக பேசினார்கள். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதாகவும் கூறினார்கள். ஆனால், தற்போது அவர்கள்  கூறியவற்றை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டிருக்கின்றனர்.

தேசிய அரசாங்கம் என்ற ரீதியில், நாம் அமைச்சுப் பதவியைப் பெற்றிருந்த போதிலும் எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தனித்துவத்தை எவ்வகையிலும் நாம் விட்டுக் கொடுக்கப் போவதில்லை.

தலைவர்கள் இருவர் இருந்தால், அக்கட்சியை வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்செல்வது சிரமமாகவிருக்கும். ஆகையினால், எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அனைவரும் ஒருங்கிணைந்து, கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்;பட வேண்டும்' என்றார்.

'நடைபெறப்போகும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிக்கு எம்மால் இயன்ற அனைத்து செயல்பாடுகளையும் முன்னெடுப்போம். எமது கட்சியின் வெற்றியே, எமதும், எமது மக்களினதும் வெற்றியாகும். தேசிய அரசில் இணைந்துள்ளோமென்று, எமது கட்சியை காட்டிக்கொடுக்க நாம் தயாரில்லை. யானை சின்னத்துக்கு வாக்களிப்பதற்கு நாம் எவ்வகையிலும் துணைபோக மாட்டோம்' என்றும் கூறினார்.

'மக்கள் விடுதலை முன்னணி தற்போது சின்னாபின்னமாகியுள்ளது. அம் முன்னணியினால், இனிமேல் தலை தூக்கவே முடியாது. அதன் அரசியல் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துவிட்டது.

எமது ஜனாதிபதி கூறுவது போன்று, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை அகற்றிவிடுவது சிறப்பானதாகும்.

எமது கட்சி சார் அனைவரும் ஒன்றிணைந்து, எமது கட்சியின் வெற்றியை உறுதிபடுத்தி, ஆட்சியை அமைப்பதற்கான ஏற்பாடுகளையே, நாம் முன்னிலைப்படுத்த வேண்டும். இதுவே எமது திட்டமாகும். இதனை முறையாகவும், கிரமமாகவும் செயல்படுத்தவேண்டியது, எமது தலையாய கடமையாகும். இனிமேல் தேசிய அரசு என்ற மாயை எமக்கு வேண்டாம். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியே அமையவேண்டும்.

கடந்த தேர்தல் காலங்களில் வளையல் வியாபாரிகள் வந்தனர். சமூக இணையத்தளங்களில் தோன்றி கவர்ச்சிகரமாக பேசி, மக்களை ஏமாற்றினர். தற்போது அவர்கள் மக்களை விட்டு அகன்று சென்று விட்டனர். மக்களை ஏமாற்றியவர்கள் ஆட்சியாளர்களாக இருந்து வருகின்றனர். அவர்களினால் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை. கிடைக்கப்போவதுமில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே, எமது கட்சியின் தலைவர். எதிர்வரும் தேர்தல்களில், ஜனாதிபதி தலைமையிலான கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், ஜனாதிபதி எமக்கு செய்து தர உறுதியளித்துள்ளார்.  அடுத்துவரும்  தேர்தல்களில், எமது கட்சியின் வெற்றி உறுதி. இது விடயத்தில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .