2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஏழு பேர்ச் போதாது; ‘பத்து பேர்ச் வழங்குவேன்’

Editorial   / 2019 நவம்பர் 11 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

பெருந்தோட்ட மக்களுக்கு, வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்ள ஏழு பேர்ச் காணி போதாதென்றும் ஆகையால் தான் ஜனாதிபதியானதும், தலா 10 பேர்ச் காணி வழங்கவுள்ளதாகவும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சஜித் பிரேமதாஸவை ஆதரித்து, தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டம், தலவாக்கலையில் நேற்று (10) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.   

அங்கு தொடர்ந்துரைத்த அவர், மலையகத்தில் உள்ள 12 இலட்சம் மக்களுக்கு, பிரஜா உரிமையைப் பெற்றுக்கொடுத்தது தனது தந்தை ரணசிங்க பிரேமேதாஸ என்றும், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் அமோக வெற்றியை தான் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.   

அமைச்சர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், இராதகிருஷ்ணன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான திலகராஜ் உள்ளிட்டோரோடு, பணத்துக்காக  ஒருபோதும் டீல் வைத்துக்கொள்ள போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.   

“மலையக மக்களுக்காக, பல்வேறு கோரிக்கைகள் என்னிடம் முன்வைக்கப்பட்டன. அதனை நான் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியுள்ளேன். மலையக மக்களின் பிரச்சினைகளை, நான் பொறுப்பேற்று, அதற்கானத் தீர்வையும் பெற்றுக்கொடுப்பேன்” என்றார்.   

“நான்கு பேர் வாழுகின்ற குடும்பத்துக்கு, மாதம் ஒன்றுக்கு குறைந்தது 55 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. உணவு, ஏனைய செலவுக்கும் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் நான் நிறைவேற்றுவேன்.   

“தொழிலாளர்களைத் தொடர்ந்தும் நான் தொழிலாளராக வைத்துக்கொள்ள விரும்பவில்லை. நீங்களும் தேயிலைத் தோட்ட உரிமையாளராக வேண்டும். மலையக மக்களின் அடிப்படைத் தேவைகள் எதுவுமே இதுவரை பூர்த்தியாகவில்லை. முறையான முன்பள்ளிகள் இல்லை.

முறையான மண்டபங்கள் இல்லை, முறையான சுகாதார நிலையங்கள் இல்லை, முறையான பாடசாலைகள் இல்லை, இன்னும் பல தேசிய பாடசாலைகளை நாம் பெற்றுக் கொடுக்கவேண்டும். அதனை நாங்கள்  கட்டாயம் பெற்றுக்கொடுப்போம். கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு, முறையான ஆசிரியர்கள் இல்லாமையால், மலையகத்தில் உள்ள மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றார்கள். கவலைப்பட வேண்டாம். அவை அனைத்தையும் நான் தீர்த்து வைப்பேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X