2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’கமிஷன் கேட்டால் தக்கப்பாடம் புகட்டுங்கள்’

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்     

"மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் தனி வீட்டுத் திட்டத்துக்கு, பயனாளிகள் பணம் வழங்க வேண்டியதில்லை என்றும் எனவே, யாராவது தரகு பணம் கேட்டு வந்தால், தக்க பாடம் புகட்டுமாறும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

மனிதவள அபிவிருத்தி நிதியம், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக, பதுளை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்கான காணி உறுதிபத்திரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நிகழ்வு, சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில், பதுளை சைமன் பீரிஸ் மண்டபத்தில், இன்று (28) நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஊவா மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சரும் பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், தோட்ட பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது தொடர்ந்துரையாற்றிய அமைச்சர்,   பெருந்தோட்டப் பகுதிகளில் தரமாகவும் சிறப்பாகவும் தனிவீடுகளை அமைக்கும் திட்டம் ஆரம்பமாகியுள்ளதாகவும் கடந்த காலங்களைப்போல் அல்லாது, பணிகள் யாவும் மிகவும் நேர்த்தியான முறையில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் எனவே, செயற்கை வேலிகளை அமைத்து, மரங்கள், பூச்செடிகளை வைத்து பசுமையான சூழலை உருவாக்க வேண்டியது பயனாளிகளின் கடமையாகும் என்றும் உட்கட்டமைப்பு வசதிகள்  அமைச்சால் செய்துகொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் அமைச்சர் திறப்பு விழாவுக்கு வருகிறார், அவரின் அமைப்பாளர் கண்காணிக்க வருகிறார் போன்ற விடயங்களுக்காக, தோட்ட மக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டதாகவும் தற்போது இவ்வாறானச் செயல்களுக்கும் தான் முற்றுபுள்ளி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வீடமைப்புத் திட்டம் துரிதகதியில் இடம்பெறவேண்டும் என்பதே, தமது எதிர்பார்ப்பாகும் என்றும் இதன் காரணமாகவே இராணுவத்திலுள்ள சிவில் பாதுகாப்பு படையின் பொறியியல் பிரிவிடம், அதற்கான பொறுப்பை ஒப்படைக்க உத்தேசித்துள்ளதாகவும் அவர்களிடம் வழங்கினால் விரைவாகவும் தரமானதாகவும் வீடுகள் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

எவரும் தரகுப்பணமும் வசூலிக்கவும் முடியாது  கொடுக்கவும் முடியாது என்றும் தெரிவித்தார்.

வீடமைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வீதி, தண்ணீர், மைதானம் உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க தனது அமைச்சில் பணம் உள்ளதாகவும் எனவே, எவருக்கும் கமிசன் கொடுக்க வேண்டியதில்லை. யாராவது தரகு பணம் கேட்டு வந்தால் தக்க பாடம் புகட்டுங்கள் என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .