2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'சிறுவர் உரிமைகளை காக்க 2017 இல் பல்வேறு நலத்திட்டங்கள்'

Kogilavani   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ஆ.கோகிலவாணி, எம்.செல்வராஜா   

சிறுவர் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில், பல்வேறு நலத்திட்டங்களை, எதிர்வரும் 2017ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தவுள்ளதாக, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.  

பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்தி, மாணவர்களிடம் கல்வியின் முக்கியத்துவத்ததை வலியுறுத்தும் வகையில், விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.  

சிறுவர் நலன் சார்பாக இலங்கையில் செயற்படும் முக்கிய அரச சார்பற்ற நிறுவனங்களின் வருடாந்த ஒன்றுகூடல், நுவரெலியா பிளக்பூல் ஹோட்டலில், அண்மையில் நடைபெற்றது.  

இந்த ஒன்றுகூடலில் பிரதம அதிதியாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரும் கலந்துகொண்டிருந்தார். இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,  

‘சிறுவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படல் வேண்டும்’ என்ற தொனிப்பொருளின் கீழ், இக்கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின்போது, சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துதல் நிறுத்தப்படல் வேண்டும், சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் மற்றும் கடத்திச்சென்று வேறு தொழில்களில் ஈடுபடுத்துதல் போன்ற விடயங்கள் முற்றாக ஒழிக்கப்படல் வேண்டும், சிறுவர்கள், பாடசாலைக்குச் செல்வது உறுதிப்படுத்தப்படல் வேண்டும் போன்ற விடயங்கள் தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.  

சிறுவர்களின் நலனை கருத்திற்கொண்டு, எதிர்வரும் 2017ஆம் ஆண்டு, பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன். குறிப்பாக சிறுவர்கள், எதிர்காலத்தில் சுபீட்சமான வாழ்க்கையை பெற, அவர்களுக்கு கல்வியறிவு கட்டாயம் அவசியம் என்பதை உணர்த்தும் வகையில், பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன்.   

மத்திய மாகாணத்தில், பெரும்பாலான பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வியில் அக்கறையுடையவர்களாக இருந்தாலும் சிலர், வறுமையை காரணம் காட்டி தமது பிள்ளைகளை வேலைக்குச் செல்ல அனுமதிக்கின்றனர். இதனால், பாதியிலேயே படிப்பைவிட்டுவிட்டு கொழும்பு போன்ற நகரங்களுகளில் சிறுவர் தொழிலாளர்களாக பலர் அமர்த்தப்படுகின்றனர்.   

சிறுவர்களுக்கு, கல்யறிவு என்பது கட்டாயமானதாகும். இதனை இல்லாமல் செய்யும் அதிகாரம், யாரிடமும் இல்லை. எனவே, இவ்வாறான விடயங்களை கருத்திற்கொண்டே, பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். பெற்றோரும் தமது பிள்ளைகளின் கல்வித் தொடர்பில் அக்கறையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்” என்று அவர் கோரினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .