2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தொழிற்சாலை மீதான தடை நீக்கம்

Kogilavani   / 2016 ஜூலை 27 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பதுளை ஹாலிஎல உடுவரைத் தோட்ட தேயிலை தொழிற்சாலையின் மீது விதிக்கப்பட்டுள்ள தடை, எதிர்வரும் 29ஆம் திகதி நீக்கப்படுமென பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவரது ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

'கடந்த ஜூன் மாதம் 7ஆம் திகதி, இலங்கை தேயிலைச் சபையின் அதிகாரிகள்;, பதுளை ஹாலிஎல உடுவரை தோட்ட தேயிலை தொழிற்சாலையில் மேற்கொண்ட திடிர் சோதனையின்போது,   பாவனைக்கு உதவாத இரசாயன பதார்த்தம் அடங்கிய 2 போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இலங்கை தேயிலைச் சபையினால், இத்  தொழிற்சாலையின் இயக்கம் காலவரையறையின்றி தடைசெய்யப்பட்டது. இதற்கு எதிராக அங்கு பணியாற்றும் சுமார் 800 தொழிலாளர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்திலும் இறங்கினர். தொழிற்சாலையில் சேவையில் ஈடுபட்டிருந்த சுமார் நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள், நிர்வாகத்தினால் வெளிக்கள வேலைக்கு அனுப்பப்பட்டார்கள்.

இதனால், வெளிக்களத்தில் நிரந்தரமாகப் பணியாற்றிய தொழிலாளர்களின் வேலை தினங்கள் குறைவடைந்ததோடு, அவர்களின் மாதாந்த வருமானமும் பாதிக்கப்பட்டது. அத்தோடு, உடுவரைத் தோட்டத்தில் பறிக்கப்பட்ட தேயிலை கொழுந்துகள், ஹப்புகஸ்தன்னை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஏனைய தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டன.

இந்நிலையில் கடந்த 04ஆம் திகதி, நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார்  தலைமையில் பல தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தோட்டக்கமிட்டித் தலைவர்கள், தேயிலை சபையின் ஆணையாளர் ஜெயந்த எதிரிசிங்கவை அவரது அலுவலகத்தில்  சந்தித்துக் கலந்துரையாடினர்.

தொழிற்சாலை மூடப்பட்டிருப்பதன் காரணமாக ஏற்பட்டிருக்கும் அவல நிலமையை இதன்போது அவர்கள் எடுத்துக் கூறியதோடு, மீண்டும் நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் தாம் இடமளிக்கப் போவதில்லை எனவும்  உறுதிமொழி  வழங்கினர்.

இதன் பயனாக, உடுவரைத் தோட்ட தொழிற்சாலையின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை, இம்மாதம் 29ஆம் திகதியோடு நீக்கப்படுவதாக தேயிலைச் சபையின் ஆணையாளர், தனது ஆல சுநக: சுஃடீஃஆகு0637 இலக்கம் மற்றும் 25.07.2016ஆம் திகதியுடன் கூடிய கடிதம் மூலம், ஹப்புகஸ்தன்ன பெருந்தோட்ட கம்பனி, ஜேம்ஸ் பின்லே நிறுவனம், இலங்கை தேயிலை வர்த்தக சம்மேளனம், இலங்கை தேயிலை தரகர் சம்மேளனம் உள்ளிட்ட தரப்பினருக்கும் அறிவித்துள்ளார்' என குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .